பட்டையக் கிளப்பும் பசுமைக்குடில் வெள்ளரி! கப்பல் கேப்டனின் கலக்கலான யுக்திகள்

16 hours ago 1

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் கலவை கூட்ரோடு அருகே உள்ள அழகிய கிராமம் கீராம்பாடி. நெல், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விளையும் இந்த ஊரில் கிரிஸ்டடிமா தீஸ்மன் என்பவர் குக்கும்பர் என்கிற வெள்ளரிக்காயை பசுமைக்குடிலில் சாகுபடி செய்து வருகிறார். கேரள மாநிலம் திருவனந்த புரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் சரக்கு கப்பலில் கேப்டனாக பணியாற்றி விட்டு, வெளிநாட்டில் தனியாக கப்பல் நிறுவனம் நடத்தி விட்டு, இப்போது விவசாயத்தில் கலக்கிவருகிறார். அவரை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம். “சரக்குக் கப்பலில் கேப்டனாக பணியாற்றிய நான் விஆர்எஸ் வாங்கிவிட்டு துபாயில் தனியாக ஷிப்பிங் கம்பெனி நடத்தினேன். விவசாயத்தின் மீதுள்ள தீராத ஆசையால் 2017ல் ஐடி துறையில் பணிபுரியும் எனது 4 நண்பர்களுடன் சேர்ந்து கீராம்பாடியில் நிலம் வாங்கி குக்கும்பர் பயிரிட ஆரம்பித்தோம். கொரோனா காலத்தில் நஷ்டம். கொரோனாவுக்கு பிறகு மொத்த நிலத்தையும் நானே வாங்கி குக்கும்பர் பயிரிட ஆரம்பித்தேன். மொத்தமுள்ள நான்கரை ஏக்கரில் 4 பசுமைக்குடில்கள் அமைத்திருக்கிறோம். இதில் ஒரு குடிலில் அதிநவீன தொழில்நுட்பத்தில் குக்கும்பர் பயிரிட இருக்கிறோம். கூடுதலாக 2 பசுமைக்குடில்கள் அமைக்க இருக்கிறோம்’’ என்று பேச ஆரம்பித்த தீஸ்மன் மேலும் தொடர்கிறார்.

“குக்கும்பர் பயிரிட வெயில் முக்கியம். மழை வந்தால் காயின் நீளம் குறைந்து விடும். அனைத்து செடி, கொடி, மரங்களில் பூ வந்த பிறகுதான் காய் உருவாகும். வெள்ளரியில் முதலில் காய் வரும். பிறகுதான் பூ பூக்கும். விதை போட்ட 40 நாளில் காய்களை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். இதற்கான விதை நெதர்லாந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்படுகிறது. கோவையில் உள்ள காய்கறிப் பழங்கள் விற்பனை செய்யும் டீலருடன் டை அப் செய்திருக்கிறோம். இங்கு பயிரிடப்படும் குக்கும்பரை அவர்களுக்கு விற்பனை செய்கிறோம். ஒரு செடி 35 முதல் 40 அடி வரை வளரும். ஒரு செடியில் ஒரு காம்பில் 2 காய்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதிகமாக காய் வந்தால் அதனை எடுத்துவிடுவோம். குக்கும்பரைப் பயிரிட மேட்டுப்பாத்தி அமைத்து, அதன்மீது மல்ச்சிங் ஷீட் போட்டு சொட்டுநீர்ப் பாசனத்திற்கு பைப் பொருத்துவோம். மேட்டுப்பாத்தியில் விதையை ஒரு அங்குல ஆழத்தில் ஊன்றுவோம். தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கக்கூடாது. தினமும் 10 நிமிடம் சொட்டுநீர்ப் பாசனம் செய்யலாம். ஒவ்வொரு மேட்டுப்பாத்தியிலும் கம்பி வலை அமைத்து, அதன்மீது செடியைப் படர விட வேண்டும்.

ஒரு செடியில் 20 முதல் 25 பிஞ்சுகள் வரை வரும். தினமும் 2000 கிலோ வரை காய்களை அறுவடை செய்யலாம். ஒரு கிலோ ₹20 முதல் ₹60 வரை விலை போகும். மழைக்காலங்களில் விலை குறைந்து விற்பனையாகும். ஒரு ஏக்கருக்கு தரமான காய்கள் வந்தால் 30 முதல் 35 டன் வரை மகசூல் எடுக்கலாம். ஒரு செடியில் 5 முதல் 7 கிலோ வரை காய்கள் வரும். காய்களைக் கத்தரிக்கோலால் கட் செய்ய வேண்டும். கைகளால் பறித்தால் செடிகள் பாதிப்படையும். ஒரு செடி இரண்டு மாதம் வரை வளரும். அதன் பிறகு அந்த செடியை எடுத்துவிட்டு மீண்டும் விதை ஊன்றி சாகுபடி செய்யலாம். தினமும் பராமரிப்பு செய்ய வேண்டும். நான் தற்போது மனைவியுடன் ராணிப்பேட்டை பாரதி நகரில் தங்கிவிட்டேன். காலை 8 மணிக்கு தினமும் தோட்டத்திற்கு வந்து விடுவேன். சரியான பராமரிப்பு செய்தால் ஒரு ஏக்கருக்கு ₹36 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். பரா மரிப்பு செலவு ₹20 லட்சம் வரை ஆகும். மீதமுள்ள தொகை லாபம்தான்.

புதியதாக நவீன தொழில்நுட்பத்தில் பசுமைக்குடில் அமைத்து சாகுபடி செய்ய ஏற்பாடு செய்து வருகிறேன். மல்ச்சிங் ஷீட்டை தொட்டி போல் செய்து ஒரு வரிசையில் 160 தொட்டிகள் வைத்து சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து அதில் தேங்காய்நார்த் தூளை நிரப்பி வெள்ளரி விதையை ஊன்றி சாகுபடி செய்யும் பணியைத் தொடங்கி இருக்கிறோம். எவ்வளவு மழை பெய்தாலும் இந்த நவீன பசுமைக்குடிலில் பாதிப்பு ஏற்படாது. விரைவில் நோய் தாக்காது. தண்ணீருக்காக 100 அடி அகலம், 18 அடி ஆழமுள்ள குளம் மற்றும் 60 அடி ஆழ கிணறு இருக்கிறது. பைப் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு ரிமோட் மூலம் ஆன் செய்து சொட்டுநீர் விடப்படுகிறது. டிசம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் காய் அறுவடை முடிந்த பிறகு முழு செடியையும் எடுத்து விட்டு பச்சை, சிவப்பு, மஞ்சள் என 3 நிறங்களில் குடைமிளகாய் மற்றும் பெரிய கத்தரிக்காய் பயிரிட இருக்கிறோம்’’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
தொடர்புக்கு.
கிரிஸ்டடிமா தீஸ்மன்: 89259 55151.

The post பட்டையக் கிளப்பும் பசுமைக்குடில் வெள்ளரி! கப்பல் கேப்டனின் கலக்கலான யுக்திகள் appeared first on Dinakaran.

Read Entire Article