சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் வடபகுதியில் உள்ள நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு செல்லும் நோக்கத்துடன் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், ரூ. 330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இக்கட்டடத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான, நவீன தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், சுகாதார வசதி, தீ பாதுகாப்பு மற்றும் கட்டட மேலாண்மை வசதிகள், சிசிடிவி கேமரா வசதிகள், 927 கார்கள் மற்றும் 2,280 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, அரங்கம், 24 மணி நேர பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டடமானது, 6,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையிலும் பசுமை கட்டடம் வழிமுறைகளின்படியும் கட்டப்பட்டுள்ளது.
பட்டாபிராமில் இப்புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டின் வடபகுதியைச் சார்ந்த குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும். டைடல் பூங்கா திறப்பு விழாவின்போது, பல்வேறு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அப்பூங்காவில் அளிக்கப்பட்டுள்ள தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.