பட்டாசு வெடிக்க தடை விதி தீபாவளியின்போது என்னவானது? டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

1 week ago 3

புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசுபாடு விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. வாகன புகை, வேளாண் கழிவுகளை எரித்தல், ஆலையில் இருந்து வெளிவரும் புகை உள்ளிட்டவற்றால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. காற்று தரக்குறியீடும் மோசமடைந்து காணப்படுகிறது.

இதனால் குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டவர்களின் சுகாதார நலனிலும் பாதிப்பு ஏற்படுத்தும் சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்பட்டது. டெல்லியில், தீபாவளியன்று காற்று மாசுபாடு 10 சதவீதம் என்ற அளவில் இருந்து 27 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்து இருந்தது. இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனை நீதிபதிகள் அபய் எஸ். ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசீ ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. இதில், பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையானது, தீபாவளி பண்டிகையின்போது அமல்படுத்தப்படவில்லை என பத்திரிகைகளில் பரவலாக வெளிவந்த செய்திகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டி பேசினர்.

இந்த நடைமுறையை ஏன் அமல்படுத்தவில்லை? என டெல்லி அரசிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டு உள்ளனர். உடனடியாக இதற்கு அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட அவர்கள், இதுபற்றி டெல்லி அரசு மற்றும் டெல்லி காவல் ஆணையாளர், ஒரு வாரத்திற்குள் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளனர் என அதில் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் இதனால், அடுத்த ஆண்டும் இதேபோன்று நிகழாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். டெல்லியில், பட்டாசு வெடிப்பதற்கான தடையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது பற்றி டெல்லி அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அமர்வு கேட்டு கொண்டுள்ளது.

இதேபோன்று, அக்டோபர் மாத கடைசி பத்து நாட்களில் வேளாண் கழிவுகள் எரிப்பு பற்றி அரியானா மற்றும் பஞ்சாப் அரசுகளும் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் நவம்பர் 14-ந்தேதி நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றது.

Read Entire Article