சென்னை: தீபாவளி பண்டிகையான நேற்று பட்டாசு மற்றும் ராக்கெட் வெடித்ததில் தமிழகத்தில் 150, சென்னையில் 48 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நேற்று முன் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பட்டாசுகளை எப்படி வெடிக்க வேண்டும் என்று தீயணைப்புத்துறை இயக்குநர் ஆபாஸ்குமார், இணை இயக்குநர் சத்தியநாராயணன் ஆகியோரது தலைமையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு விபத்துகள் குறைந்துள்ளன. குறிப்பாக சென்னையில் விபத்துகள் குறைந்துள்ளன.
இது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு – மீட்புப்பணிகள் துறை தெரிவிக்கையில், ‘தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புணிகள் துறை தீபாவளி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திலுள்ள 368 தீயணைப்பு மீட்புப்பணிகளில் பணிபுரியும் 8000க்கும் மேற்பட்ட அலுவலகர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். அதேபோல் சென்னை மாநகரில் உள்ள 43 தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையங்களில் பணிபுரியும் 800க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
கடந்தாண்டுகளில் தீபாவளி திருளாளன்று சென்னை மாநகரில் பட்டாசு வெடிப்பதால் ஏற்பட்ட தீவிபத்தின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 இடங்களில் தீயணைப்பு ஊர்திகள் பாதுகாப்பு பணிபுரிய வெளி மாவட்டங்களிலிருந்து கூடுதலாக வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என 2406 இடங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டது. இதில் சென்னை மாநகரில் மட்டும் 276 இடங்களில் இப்பிரசாரங்கள் நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் தீபாவளி திருநாளன்று பட்டாசு மற்றும் இராக்கெட் வெடித்ததில் 254 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 102 தீ விபத்துகள் பட்டாசு மற்றும் ராக்கெட் வெடித்ததில் நிகழ்ந்தது. இவ்வாண்டு தொடர் மழை மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தீபாவளி அன்று தமிழகத்தில் 150 தீ விபத்துகள் பட்டாசு மற்றும் ராக்கெட் வெடித்ததில் ஏற்பட்டுள்ளது.
இதில் சென்னையில் 48 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தீ விபத்துகள் மிக குறைந்த எண்ணிக்கையில் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் பட்டாசு வெடித்ததால் தீக்காயம் ஏற்பட்டு 544 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சென்னையில் 95 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.
கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளி பண்டிகையின் போது நடந்த விபத்துகளின் எண்ணிக்கை
* 2024 சென்னையில் 48 இடங்களில் தீ விபத்து
மற்ற மாவட்டங்களில் 102 இடங்களில் தீ விபத்து
தமிழ்நாடு முழுவதும் தீயணைப்புத் துறைக்கு 232 அவசர அழைப்பு வந்தது
பட்டாசு வெடித்ததால் தீக்காயம் ஏற்பட்டு 544 பேர் மருத்துவமனையில் அனுமதி
* 2023 சென்னையில் 102 இடங்களில் தீ விபத்து
மற்ற மாவட்டங்களில் 152 இடங்களில் தீ விபத்து
தமிழ்நாடு முழுவதும் தீயணைப்புத் துறைக்கு 364 அவசர அழைப்பு வந்தது
பட்டாசு வெடித்ததால் தீக்காயம் ஏற்பட்டு 794 பேர் மருத்துவமனையில் அனுமதி
* 2022 சென்னையில் 208 இடங்களில் தீ விபத்து
மற்ற மாவட்டங்களில் 128 இடங்களில் தீ விபத்து
தமிழ்நாடு முழுவதும் தீயணைப்புத் துறைக்கு 567 அவசர அழைப்பு வந்தது
பட்டாசு வெடித்ததால் தீக்காயம் ஏற்பட்டு 1317 பேர் மருத்துவமனையில் அனுமதி
The post பட்டாசு மற்றும் ராக்கெட் வெடித்ததில் தமிழகத்தில் 150 தீ விபத்துகள் சென்னையில் 48 விபத்துகள்: தீயணைப்புத்துறை தகவல் appeared first on Dinakaran.