சென்னை: பட்ஜெட் உரையை புறக்கணித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக, ஓபிஎஸ் அணியினர் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8.28 மணிக்கு சட்டப்பேரவைக்கு வந்தார். அவருடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவும் உடன் வந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவைக்குள் வந்ததும் அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று மேஜையை தட்டி அவரை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து 8.29 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர்.
சரியாக காலை 9.30 மணிக்கு சபாநாயகர் அப்பாவு பேரவைக்குள் வந்ததும், திருக்குறள் வாசித்து விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) வாசிக்க தொடங்கினார். அவர் பேச எழுந்ததும், அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் எழுந்து ஒரு பிரச்னை தொடர்பாக பேசினார். ஆனால் அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படவில்லை. தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு கூறும்போது, ”இன்று தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை (15ம் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதைத்தொடர்ந்து திங்கட்கிழமை எதிர்க்கட்சி துணைத்தலைவர் குறிப்பிட்ட பிரச்னை குறித்து பேச அனுமதி அளிக்கப்படும்” என்றார்.
ஆனாலும், ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்து பேசினார். அவருக்கு மைக் தரப்படாததால், அவர் பேசுவது யாருக்கும் புரியவில்லை. அவரை பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து பேரவையில் கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இவ்வளவு சத்தத்துக்கும் இடையே நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை தொடர்ந்து படித்துக் கொண்டு இருந்தார். அவரின் ஒவ்வொரு அறிவிப்புக்கும் திமுக எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி வரவேற்பு அளித்துக் கொண்டு இருந்தனர். இது அதிமுக உறுப்பினர்களுக்கு பதிலடியாக இருந்தது.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் எழுந்து ஒரு பிரச்னை குறித்து பேசினார். அவரையும் சபாநாயகர் அப்பாவு பேச அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து காலை 9.34 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பட்ஜெட் உரையை புறக்கணித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். அவர்களை தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏதோ பிரச்னை குறித்து பேச எழுந்தார். அவரை பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து பேரவையில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை தொடர்ந்து படித்தார்.
The post பட்ஜெட் உரையை புறக்கணித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக பாஜக, ஓபிஎஸ் அணியினர் வெளிநடப்பு appeared first on Dinakaran.