திருப்போரூர்: படூர் ஊராட்சியில் ரூ.1 கோடியே, 8 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய படூர் ஊராட்சியில் பாரதியார் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி வ.உ.சி தெரு, வள்ளலார் தெரு, திருவள்ளுவர் தெரு, வேம்புலி அம்மன் கோயில் தெரு, வி.ஜி.என் குடியிருப்பு, ஜான்சன் குடியிருப்பு, வீராணம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், இச்சாலை மிகவும் சேதமடைந்ததால் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வி.ஜி.என் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியாக 74 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு அந்த நிதியில் சாலைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு 100 சதவீத பங்களிப்புடன் இச்சாலை அமைக்கப்பட்டது.
மேலும், மாநகரத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளின் வளர்ச்சி நிதி திட்டத்தின்க கீழ் 8 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவில் வள்ளலார் தெரு, 12 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் திருவள்ளுவர் தெரு, 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் பாரதிதாசன் தெரு ஆகியவை புதியதாக அமைக்கப்பட்டது. மேலும், ஒன்றிய நிதி, மாவட்டக்குழு நிதி ஆகியவற்றின் கீழ் பாரதியார் சாலையில் 5.5 லட்சம் ரூபாய் செலவில் சிறுபாலம் அமைக்கப்பட்டது. இவற்றின் திறப்பு விழா நேற்று முந்தினம் படூர் ஊராட்சியில் நடைபெற்றது. படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் தலைமை தாங்கினார். திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன் புதிய சாலைகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையாளர் பூமகள்தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் அரி பாஸ்கர் ராவ், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
The post படூர் ஊராட்சியில் ரூ.1.8 கோடியில் புதிய தார் சாலைகள்: பயன்பாட்டிற்கு வந்தது appeared first on Dinakaran.