பெங்களூரு,
சுதீப் மற்றும் சுஜித் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான படம் 'கா'. இவர்கள் இயக்கும் முதல் படம் இதுவாகும். இதில் கிரண் அப்பாவரம் கதாநாயகனாகவும், தன்வி ராம் மற்றும் நயன் சரிகா என இரண்டு கதாநாயகிகளும் நடித்துள்ளனர்.
சமீபத்தில், ஐதராபாத்தில் இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாக சைதன்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய நடிகர் கிரண் அப்பாவரம், இந்த படம் தோல்வியடைந்தால் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், கிட்டத்தட்ட கிரண் இந்த சவாலில் வென்றுவிட்டார் என்றே கூறலாம். ஏனென்றால், 'கா' படம் வசூலில் நன்கு முன்னேறி வருகிறது. மேலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனையடுத்து, சவாலில் கிரண் அப்பாவரம் வென்றிருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கிரண் அப்பாவரம் பேசியதாவது,
"எல்லோரையும் போலவே எனக்கும் வெற்றி மற்றும் தோல்வி படங்கள் உள்ளன. நான் 4 வருடங்களில் 8 படங்களில் நடித்துள்ளேன். அதில் 4 நல்ல படங்களை கொடுத்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் தோல்வி நடிகன் அல்ல.
எல்லா படமும் வெற்றியடையும் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால் அந்த படங்களுக்கு என்னால் முடிந்த உழைப்பை கொடுப்பேன் என்று மட்டும் என்னால் உத்தரவாதம் கொடுக்க முடியும். 'கா' மோசமான படம் என்று யாராவது உணர்ந்து, அது தோல்வியடைந்தால் நான் சினிமாவை விட்டு விலகுகிறேன். இது எனது வாக்குறுதி' என்றார்