உளுந்தூர்பேட்டையில் வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது தொடர்பாக திமுகவினரிடையே கைகலப்பு

2 hours ago 2

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 300-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு திமுக சார்பில் முகவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதில் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் ஆதரவாளர்களையும், ஒன்றிய செயலாளர்கள் ஆதரவாளர்களையும் வாக்குச்சாவடி முகவர்களாக நியமனம் செய்வதில் திமுகவினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஒன்றிய செயலாளர்கள் அவர்களது ஆதரவாளர்களை அதிக அளவில் வாக்குச்சாவடி முகவர்களாக நியமித்துள்ளதாகவும், எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு வந்தது. இதனால் அவர்களுக்கிடையே கோஷ்டி பூசல் ஏற்படும் நிலை இருந்து வந்தது.

இதுதொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து சுமுகமாக பேசி முடிவு செய்ய கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. நேற்று மதியம் உளுந்தூர்பேட்டை பயணியர் விடுதிக்கு வந்தார். இதையடுத்து அங்கு மணிக்கண்ணன் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களும், ஒன்றிய செயலாளர்களின் ஆதரவாளர்களும் குவிந்தனர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், மணிக்கண்ணன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் பயணியர் விடுதியில் உள்ள அறையில் பேசிக் கொண்டிருந்தபோது வெளியே இருந்த கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுபற்றி அறிந்த எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், மணிக்கண்ணன் ஆகியோர் வெளியே வந்து கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும் அவர்களால் சமாளிக்க முடியவில்லை.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். இருப்பினும் அங்கு தி.மு.க.வினர் குவிந்து வருவதால், 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் தி.மு.க.வினரிடையே ஏற்பட்ட கைகலப்பால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

Read Entire Article