சென்னை,
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் அனுரா திசநாயகா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு, நவம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் திசநாயகாவின் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி என்று கூறப்படும் மக்கள் விடுதலை முன்னணி கட்சி அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெருவாரியான வெற்றியைப் பெற்றது. கம்யூனிச சித்தாந்தத்தை பின்பற்றும் இந்த கட்சி தொடக்கத்தில் இருந்தே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையும், சீனாவுக்கு ஆதரவான மனநிலையையும் கொண்டது.
ஆனால், இந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடனேயே திசநாயகா, "இலங்கை மண்ணை, இந்தியாவுக்கு எதிரான, இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான எந்த செயலுக்கும் அனுமதிக்கமாட்டோம்" என்று உறுதிபட தெரிவித்தது ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. அதேபோல, அவர் பதவியேற்ற பிறகு முதல்பயணமாக இந்தியாவுக்கு வந்ததும் இந்த நம்பிக்கையை மேலும் வளர்த்தது. ஆனால், அவரது அடுத்த பயணம் அடுத்த மாதமே, அதாவது வருகிற ஜனவரி மாதமே சீனாவை நோக்கி இருப்பது, அவர் இந்தியா-சீனா இரு நாடுகளையுமே சமநிலை உறவில் வைத்திருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது.
ஏனெனில், பொருளாதாரத்தில் மிகவும் நலிந்து இருக்கும் இலங்கையின் வெளிநாட்டு கடன்கள் சீனாவிடம் இருந்தும், இந்தியாவிடம் இருந்துதான் கணிசமான அளவில் இருக்கிறது. ஆனால், கடன் அளவை ஒப்பிட்டால் இந்தியாவைவிட சீனாவிடம் இருந்துதான் அதிகமாக வாங்கியிருக்கிறது. அதாவது, சீனாவிடம் இருந்து இந்திய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ ரூ.50 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ள இலங்கை, இந்தியாவிடம் இருந்து ரூ.11 ஆயிரத்து 450 கோடி கடன் வாங்கியுள்ளது. இது இருநாடுகளுக்கு இடையேயான பரஸ்பர கடன்தான். இதுதவிர, ஆசிய வளர்ச்சி வங்கி, உலகவங்கி, சர்வதேச நிதியம் போன்ற பன்னாட்டு வங்கிகளிடம் இருந்தும், சீன வளர்ச்சி வங்கியிடம் இருந்தும் நிறைய கடன் வாங்கியிருக்கிறது.
வருமானத்துக்கு சுற்றுலாத்துறையை மட்டுமே பெருமளவில் நம்பியிருந்த இலங்கையில், கொரோனாவுக்கு பிறகு இந்த துறை பெரிதும் வீழ்ச்சியடைந்தது. ஆக, சீனாவையும் பெரிதும் சார்ந்திருக்கும் சூழ்நிலையில், இந்தியா வந்த இலங்கை அதிபர் திசநாயகா, பிரதமர் நரேந்திரமோடியிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், இருநாடுகளின் கலாசார உறவுகள், நட்புறவு, வர்த்தக உறவு போன்றவற்றின் மேம்பாட்டுக்கு பேசிய நேரத்தில் இலங்கையின் வளர்ச்சியில் இந்திய பங்களிப்புகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஆனால், தமிழக மீனவர்கள் பிரச்சினையைப் பொறுத்தமட்டில், மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காணப்படும் என்றுதான் முடிவெடுக்கப்பட்டதேதவிர, இலங்கை சிறையில் வாடும் 141 மீனவர்கள் விடுதலை குறித்தோ, கச்சத்தீவை மீட்பது குறித்தோ, இலங்கை கடற்படையால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 198 படகுகளை மீண்டும் ஒப்படைப்பது குறித்தோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், விரைவில் இந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக நடக்கும் கூட்டங்களின் பலனாக அதுவும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தமிழக மீனவர்கள் பயன்படுத்தும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் குறித்தும், சுருக்குவலை குறித்தும் மட்டுமே இலங்கை அதிபர் தன் குறைபாட்டை தெரிவித்திருக்கிறார். மற்றபடி இரு நாடுகளுக்கு இடையேயான பயணிகள் படகு சேவைகள் பற்றி பேசப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியாவின் உதவி தேவை என்பதைப் பற்றி நன்றாக பேசி நட்புறவு மேம்பாட்டுக்கு பாலம் அமைத்துள்ளார்.