பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலி: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

1 day ago 3

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பங்கரி, பாதல்புரி, மராரி கலன் மற்றும் தெரேவால் ஆகிய கிராமங்களில் நேற்றுமுன்தினம் மாலை கள்ளச்சாராய விற்பனை நடந்தது. ஏராளமான கிராமவாசி மலிவு விலையில் கிடைப்பதால் மெத்தனால் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் அவர்கள் பெரும்பாலானவர்கள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தினசரி கூலி தொழிலாளர்கள். மேலும் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் மருத்துவ குழு அமைக்கப்பட்டு வீடு வீடாக சென்று கள்ளச்சாராயம் குடித்தவர்களை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கும்படி வலியுறுத்தப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த கிராமங்களுக்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் முக்கிய குற்றவாளி உட்பட கள்ளச்சாராயம் விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மஜிதா பகுதி டிஎஸ்பி அமோலக் சிங் மற்றும் மஜிதா காவல் நிலைய காவல் நிலைய அதிகாரி அவ்தார் சிங் ஆகியோர் அலட்சியத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய முதல்வர் பக்வந்த் மான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. முதல்வர் பகவந்த் மான், துயரம் சம்பவம் நடந்த கிராமங்களுக்குச் சென்று, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

இதனிடையே அப்பாவி மக்களின் மரணங்களுக்கு காரணமானவர்கள் தப்பமுடியாது என்றும், இந்த வழக்கின் பின்னணியில் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்கள் இருந்தாலும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

இவை மரணங்கள் அல்ல, கொலைகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அம்மாநில பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசாங்கம் அனைத்து வகையான ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

The post பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலி: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article