சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ரூ.1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள், தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாத்திட, ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
அதை ஏற்று, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் ரூ.1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 2023 அக்டோர் 28ம்தேதி அறிவித்தார், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரங்கத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த அரங்கத்தின் மொத்த பரப்பளவு 9848.98 சதுர அடி.
இவ்வரங்கத்தில் பொதுமக்களுக்கான காத்திருப்பு கூடம் மற்றும் மிக முக்கிய பிரமுகர்களுக்கான நிரந்தர நிழற்கூரை ஆகியவையும், பொதுமக்களுக்கான காத்திருப்பு கூடத்தில் 500 ஆண்கள் மற்றும் 500 பெண்கள் தனித்தனியாக வரிசையில் செல்லும் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, சுப நிகழ்ச்சிகள் நடத்திட மேடை வசதி, மின்விளக்கு மற்றும் மின்விசிறி வசதிகள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேவர் நினைவாலயத்தில் முதல்வர் நாளை மரியாதை: பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழா நேற்று காலை ஆன்மிக விழாவாக தொடங்கியது. முதல் நாளான நேற்று அறங்காவலர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில், உலக நன்மை வேண்டி மகா யாக பெருவிழா தொடங்கியது. இன்று காலை 2ம் நாள் யாகசாலை பூஜை, லட்சார்ச்சனை மற்றும் அரசியல் விழா ஆகியவை நடைபெற உள்ளன. நாளை (அக். 30) நடக்கும் அரசு விழாவில் தேவர் நினைவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்துகின்றனர். முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா, டிடிவி.தினகரன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்துகின்றனர்.
The post பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் ரூ.1.55 கோடியில் புதிய அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.