பசுமையாக காட்சியளிக்கும் முதுமலை சாலையில் உலவும் வன விலங்குகள்

3 weeks ago 4

ஊட்டி : முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பசுமை திரும்பியுள்ளதால், விலங்குகள் சாலையோரங்களில் வலம் வருகின்றன. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் 50 சதவீதத்திற்கும் மேல் வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இந்த வனப்பகுதிகள் முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி, கூடலூர் வன கோட்டங்கள், முக்கூருத்தி தேசிய பூங்கா என பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதில் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.

இங்கு புலிகள் மட்டுமின்றி காட்டு யானைகள், சிறுத்தைகள், கரடி, காட்டு எருமைகள், பல்வேறு வகையான மான்கள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இதுதவிர இந்த சரணாலயத்தில் விலை உயர்ந்த தேக்கு மற்றும் ஈட்டி மரங்கள் அதிகளவு உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்த புலிகள் காப்பகம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் எல்லையில் அமைந்துள்ளது.

இந்த முதுமலை புலிகள் காப்பகம் வழியாக தொரப்பள்ளி – கக்கநல்லா சாலை மற்றும் மசினகுடி – தெப்பகாடு ஆகிய இரு சாலைகள் செல்கின்றன. இந்த சாலை வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குளு குளு கோடைவாச தலமாக ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். இதனால் இந்த சாலை எப்போதும் பிஸியாகவே காட்சியளிக்கும்.

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இங்குள்ள தெப்பகாட்டில் இருந்து வாகன சவாரியும் உள்ளது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வனத்திற்குள் சென்று யானை உள்ளிட்ட வன விலங்குகளை பார்த்து மகிழ்கின்றனர். கடந்த ஜூலை துவங்கி செப்டம்பர் வரையிலும், அதன் பின்னர் கடந்த 3 மாதங்களாக பருவ மழை பெய்தது.

குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவு பெய்தது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் மற்றும் சிறிய மரங்களும் பசுமை திரும்பியது.இங்குள்ள நீரோடைகள், குளங்கள் மற்றும் குட்டைகள் நிரம்பின.

வனங்களிலும் பசுமை திரும்பியுள்ளதால், கரடி, மான், யானை போன்ற வன விலங்குகள் சாலையோரங்களில் உலா வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

சில சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பார்த்தவுடன் வாகனங்களில் இருந்து கீழே இறங்கி புகைப்படம் எடுப்பது, அருகில் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால் கோபமடையும் விலங்குகளை அவர்களை தாக்கக்கூடிய அபாயம் உள்ளது. இதனால் வன விலங்குகள் சாலையோரம் உலா வரும் நிலையில் அவற்றை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

The post பசுமையாக காட்சியளிக்கும் முதுமலை சாலையில் உலவும் வன விலங்குகள் appeared first on Dinakaran.

Read Entire Article