பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலையில் மண்டல பூஜை: நடை சாத்தப்பட்டது

3 weeks ago 6

திருவனந்தபுரம்: ஆயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று மண்டல பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு இந்த வருடத்திற்கான மண்டல காலம் நிறைவடைந்தது.

இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 15ம் தேதி மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 41 நாள் மண்டல கால பூஜைகள் நவம்பர் 16ம் தேதி முதல் தொடங்கின. நேற்று முன்தினம் மாலை ஐயப்ப விக்கிரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. நேற்று நண்பகல் 12க்கும் 12.30க்கும் இடையே தந்திரி கண்டரர் ராஜீவரர் தலைமையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது. இதன் பின்னர் மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி நடை சாத்தப்பட்டது. நேற்றுடன் இந்த வருட மண்டல காலம் நிறைவடைந்தது.

மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். இன்று முதல் வரும் 29ம் தேதி வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

The post பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலையில் மண்டல பூஜை: நடை சாத்தப்பட்டது appeared first on Dinakaran.

Read Entire Article