பகுதிநேர ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்

1 month ago 5

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பு ஊதிய அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர்.
அதன்படி வாரத்தில் 3 நாட்கள் மட்டும் அவர்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு முதற்கட்டமாக அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பின்னர் ரூ.7500 என்று ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கேட்டு பேல கட்ட போராட்டங்களை நடத்தினர். அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக பகுதி நேர ஆசிரியர்களுக்கு மேலும் ஊதியம் உயர்த்தி மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்தது. மேலும் ஊதியம் உயர்வு மற்றும் பணி நிரந்தரம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது.

இந்நிலையில், நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே குவிந்தனர். பின்னர் கோட்டை நோக்கி முற்றுகையில் ஈடுபட புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். இது குறித்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பினர் கூறியதாவது: பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடந்த ஆட்சியில் ஏமாற்றம் கிடைத்தது.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குழந்தைகளுக்கு நாங்கள் பாடம் கற்பிக்கும் நிலையில் உள்ளோம். எங்களுக்கு குறைந்த ஊதியம் தான் வழங்கப்படுகிறது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். மேலும் முதலில் எங்களுக்கு செப்டம்பர் மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். எங்களை பணிநிரந்தரம் செய்யவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post பகுதிநேர ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article