பகுதிநேர ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

2 months ago 13

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக ஆட்சியில், ஆட்சியாளர்களுக்கும், பல்கலைக்கழகங்களின் வேந்தராகத் திகழும் கவர்னருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல்களால் பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், எங்களது ஆட்சியில் முதலிடத்தைப் பிடித்த உயர்கல்வித்துறை, தற்போது அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. உயர்கல்வி ஒன்றையே நம்பி கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் இந்த ஆட்சியாளர்களால் பாழ்பட்டு நிற்பது வெட்கக்கேடானது.

தற்போது, ஏறத்தாழ 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும்; இதில் சுமார் 1,000 கவுரவ உதவிப் பேராசிரியர் பணியிடங்களை திமுக அரசு நிரப்ப உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்த கவுரவ உதவிப் பேராசிரியர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக 25,000/- ரூபாய் வழங்க உள்ளதாகவும்; ஏற்கெனவே சுமார் 7,360 கவுரவ உதவிப் பேராசிரியர்கள் இதே ஊதியத்தில் பணியாற்றுவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவச் செல்வங்களின் அறிவை விரிவாக்கும் தூய பணியில் ஈடுபட்டுள்ள உதவிப் பேராசிரியர்கள் தற்காலிகமாக பணி அமர்த்தப்படுவது நடைமுறையில் ஒன்றாகும். அதேநேரம், அவர்களுடைய பணி மூப்பின் அடிப்படையில் உரிய விதிமுறைகளின்படி அவர்களை காலமுறை ஊதியத்தில் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பது அவசியமாகும்.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் அனைத்து உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும், வரும் கல்வி ஆண்டுக்குள் நிரப்பி உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக 12,500/- ரூபாய் வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு தீபாவளி போனஸ் போன்ற வேறு எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. கல்விக் கண் திறக்கும் பகுதிநேர பள்ளி ஆசிரியர்கள் மனமகிழ்வுடன் தீபாவளியைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் மாதத்திற்கான ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article