சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த மாநில தலைவர் ஆனந்தன் தரப்பிற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பெரம்பூரில் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு நாகேந்திரன் தரப்பிலிருந்து அவரது உறவினர்கள் மற்றும் இரண்டாவது மகன் அஜித்ராஜ் உள்பட பலரும் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர் என கூறப்படும் பிரபல ரவுடி ஒத்தக்கண் ஜெயபாலை போலீசார் கைது செய்தனர். மேலும் நாகேந்திரனின் நெருங்கிய கூட்டாளியான வெள்ள பிரகாஷ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். நாகேந்திரனின் தங்கை கற்பகத்தையும் போலீசார் கைது செய்தனர். பழிக்குப்பழி சம்பவம் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதை மனதில் வைத்து தொடர்ந்து புளியந்தோப்பு காவல் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை வருவதையொட்டி பெரம்பூரில் நினைவஞ்சலி கூட்டம் நடத்த தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக உள்ள ஆனந்தன் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் 6 அடி சாலையாக, குறுகலாக இருப்பதாலும், அந்த பகுதியில் இரண்டு பெரிய பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளதாலும் பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்க முடியாது என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
தற்போது பகுஜன் சமாஜ் கட்சியில் ஆனந்தன் அணி பிரிவினராகவும், இறந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தரப்பினர் மற்றொரு பிரிவினராகவும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உடல் புதைக்கப்பட்ட பொத்தூர் கிராமத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், மற்றொரு அணியினரான ஆனந்தன் அணியினர் பெரம்பூரில் நடத்த வேண்டும் என கூறி வருகின்றனர். தற்போது பெரம்பூரில் பகுதியின் சமாஜ் கட்சி அலுவலகம் உள்ள இடம் ஆம்ஸ்ட்ராங்கிற்கு சொந்தமான இடம். இதனால் அந்த இடத்தில் ஆனந்தன் தரப்பினரை நிகழ்ச்சி நடத்த அனுமதித்தால் பொற்கொடி தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதால் தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதை கருதி போலீசார் ஆனந்தன் தரப்பினருக்கு அனுமதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. எனவே தற்போது ஆனந்தன் தரப்பினரை மாற்று இடத்தில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவஞ்சலி நடத்திக் கொள்ள போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அவர்களது தரப்பும் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்ட பொத்தூரில் தனியாக நேரம் ஒதுக்கி அதே இடத்தில் அஞ்சலி செலுத்த முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தொடர்ந்து பெரம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியை சுற்றிலும் சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், 5 பேருக்கு மேல் கும்பலாக வந்தால் தடுத்து நிறுத்தப்படுவார்கள் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மனு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொது செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், ‘ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் கட்சியினரின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்து வரும் நிலையில், மாநில காவல்துறை இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க முடியாது.
இந்த கொலையில் தொடர்புடைய ‘சம்பவ’ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கவில்லை என்பதால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக கூறினார்.
இதனையடுத்து, மனு குறித்து காவல்துறை பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களை விடுவிக்கக்கோரி மனுதாக்கல் செய்துள்ளதால் விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.
The post பகுஜன் சமாஜ் கட்சியில் கோஷ்டி மோதல்; பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: பலத்த பாதுகாப்பு appeared first on Dinakaran.