வாஷிங்டன்: அமெரிக்காவில் எப்பிஐ இயக்குனராக இந்தியா வம்சவாளியை சேர்ந்த காஷ் படேல் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேலை எப்பிஐ இயக்குனராக நியமித்து உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து காஷ் படேல் நியமனம் தொடர்பாக வியாழனன்று செனட் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 51க்கு 49 வாக்குகள் என்ற அடிப்படையில் காஷ் படேல் நியமனம் உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அவரது குடும்பத்தினர் மற்றும் காதலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெள்ளை மாளிகை வளாகத்தில் உள்ள ஐசனோவர் நிர்வாக அலுவலக கட்டிடத்தில் பதவியேற்பு நடைபெற்றது. அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி காஷ் படேலுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது காஷ் படேல் பகவத் கீதையின் மீது சத்தியம் செய்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அப்போது படேல்,\\”நான் அமெரிக்க கனவில் வாழ்கிறேன். அமெரிக்கா என்ற கனவு இறந்துவிட்டதாக நினைப்பவர்கள் இங்கே பாருங்கள். உலகின் மிகப்பெரிய தேசத்தின் சட்ட அமலாக்க முகமைக்கு தலைமை தாங்கிவிருக்கும் முதல் தலைமுறை இந்தியருடன் நீங்கள் பேசுகிறீர்கள். அது வேறெங்கும் நடக்காது” என்றார்.
* 1500 ஊழியர்கள் இடமாற்றம்
புதிய எப்பிஐ இயக்குனர் காஷ் படேல் எப்பிஐ தலைமையகத்தில் உள்ள 1000 ஊழியர்களை நாடு முழுவதும் உள்ள கள அலுவலகங்களுக்கு இடமாற்றம் செய்ய இருப்பதாகவும், கூடுதலாக 500பேரை அலபாமாவின் ஹன்ட்ஸ்வில்லிக்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஷ் படேல் வெள்ளியன்று பதவியேற்ற நிலையில் அதே நாளில் இந்த திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
The post பகவத் கீதை மீது கை வைத்து எப்பிஐ இயக்குனராக காஷ் படேல் பதவியேற்பு appeared first on Dinakaran.