பகல்-இரவு டெஸ்ட்; நாதன் லயனுக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு..?

3 hours ago 1

ஜமைக்கா,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் 159 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் 133 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. இது பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) நடத்தப்படுகிறது. முதல் இரு டெஸ்டிலும் பந்து வீச்சாளர்களே கோலோச்சினர். பிங்க் பந்திலும் பவுலர்களின் ஜாலமே மேலோங்கி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற ஆஸ்திரேலியா முனைப்பு காட்டும். அதேவேளையில் இந்த ஆட்டத்தில் ஆறுதல் வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் போராடும். இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், இந்த போட்டிக்கான பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய அணி இன்னும் அறிவிக்கவில்லை. இந்த போட்டியில் 'பிங்க் பந்து ஸ்பெஷலிஸ்ட்' எனப்படும் ஸ்காட் போலண்ட் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாதன் லயனுக்கு மாற்றாக இந்த முடிவு எடுக்கப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பேட் கம்மின்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, எல்லாமே ஒரு ஆப்ஷன்தான். இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. குறிப்பாக பிங்க் பந்து கிரிக்கெட்டில் நாங்கள் என்ன சிறப்பானது என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

2 சீசன்கள் இங்கு பிங்க் பந்தில் விளையாடினோம். இன்னும் இந்த பிட்ச் குறித்து சரியாக கணிக்க முடியவில்லை. அதனால், கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு பிறகு அணியை அறிவிப்போம் என்றார். பிங்க் பந்து கிரிக்கெட்டில் ஆஸி. அணி 12-இல் 11 போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article