மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட கூத்தாமண்டி பிரிவு பகுதியில் கடந்த வாரம் ஆண் காட்டு யானையொன்று சோர்வுடன் நிற்பதை கண்ட வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் மருத்துவ குழுவினருடன் சம்பவ இடம் விரைந்து யானைக்கு சிகிச்சையளிக்க துவங்கினர்.
மருத்துவர் சுதாகர் தலைமையிலான மருத்துவ குழுவினர் முதல் நாளில் வாழைப்பழம்,தர்பூசணி, முலாம்பழம் போன்ற பழங்களில் வலி நிவாரணி,ஆண்டிபயாடிக் மாத்திரைகள்,ஊட்டச்சத்து மாத்திரைகள்,குடற்புழு நீக்க மாத்திரைகளை வைத்து யானைக்கு உண்ண கொடுத்தனர்.2ம் நாளில் வெல்லம் கலந்த சாப்பாட்டில் மருந்து கலந்து கொடுத்தனர். இதனால் ஓரளவு யானை தெம்பானாலும் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.3ம் நாளில் மருந்துகள் எடுத்த களைப்பில் வனப்பகுதியில் உள்ள ஒரு மர நிழலில் கீழே படுத்து உறங்கியது.
4ம் நாளான நேற்று முன்தினம் சுமார் 300 மீட்டர் தொலைவு மட்டுமே நடந்து சென்றது.தொடர்ந்து அங்கும் யானைக்கு மாத்திரை, மருந்துகளை பழங்கள் மற்றும் சாதத்தின் மூலமாக கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்றும் யானைக்கு மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. வனக்கால்நடை மருத்துவர் சுதாகர் கூறுகையில்:
பழங்கள் மற்றும் சாதத்தின் மூலம் கொடுக்கப்பட்ட மாத்திரை,மருந்துகளில் பலவற்றை யானை சரிவர உட்கொள்ளவில்லை. மேலும், யானையின் அடி வயிறு சற்று வீக்கமாக காணப்படுகிறது. யானைக்கு கல்லீரல்,சிறுநீரகம் மற்றும் நுரையீரல் உள்ளிட்ட பாகங்களில் ஏதேனும் ஒன்றில் நோய்த்தொற்று இருக்கலாம். இதனால் அடி வயிற்றில் வீக்கம் ஏற்பட்டிருக்கலாம்.இதன் காரணமாக யானையால் நீண்ட தூரம் நடக்க இயலவில்லை. தற்போது யானையை முழுமையாக குணமடைய வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
The post நோய்த்தொற்று பாதிப்பால் யானையால் நீண்ட தூரம் நடக்க இயலவில்லை: கால்நடை மருத்துவர் தகவல் appeared first on Dinakaran.