சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் உள்பட 2,000 பேர் மற்றும் பிற கட்சியினரை சேர்ந்த 1,000 பேர் என மொத்தம் 3,000 பேர் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள், திமுகவில் இணையும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக பெரியார் சிலையை வழங்கினர்.
அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திமுகவில் சேருவதற்காக ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். திமுக என்பது நேற்று முளைத்த காளான் அல்ல; திமுகவை பேரறிஞர் அண்ணா உருவாக்கிய போது, இக்கழகம் ஆட்சிக்கானது மட்டுமல்ல, மக்களுக்கு பணியாற்ற வேண்டும், ஏழை - எளிய - பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும், பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இவ்வியக்கம் தொடங்கப்படுகிறது என்றார்.
இன்றைக்கு சிலர் கட்சி தொடங்கிய உடனே ஆட்சிக்கு வருவோம் என்று கூறும் நிலை நாட்டில் இருந்துக்கொண்டிருக்கிறது. நாங்கள்தான் அடுத்த ஆட்சி, நாங்கள்தான் அடுத்த முதல்-அமைச்சர் என சிலர் சுற்றிக்கொண்டு பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர் யார், எப்படிப்பட்டவர், எந்தக் கட்சித் தலைவர் என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. காரணம் அவர்களுக்கெல்லாம் அடையாளம் காட்ட நான் விரும்பவில்லை. அவர்கள் பெயரைச் சொல்லி இந்த மேடைக்கு உரிய அங்கீகாரத்தையும் கவுரவத்தையும் குறைக்க நான் விரும்பவில்லை.
அடுத்த முறையும் தனது உரையை படிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து வெளியேற வேண்டும். கவர்னரின் பேச்சுகள்தான் திமுகவை வளர்க்கிறது; அதனால் கவர்னரை மாற்ற வேண்டாம். இதே கவர்னர் தமிழ்நாட்டுக்கு தொடர வேண்டும் என பிரதமர், உள்துறை மந்திரிக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது; ஆனாலும் மீண்டும், மீண்டும் சொல்வோம். முதலில் நீங்கள் யாரை நம்பி சென்றீர்களோ அவர்களும் தொடர்ந்து பேச வேண்டும். மாற்றுக் கட்சியினரை அழைத்து வாருங்கள், வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம். மக்களுக்கு இந்த ஆட்சியின் சாதனைகளை நினைவுபடுத்தினாலே போதும். 200 அல்லது 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறலாம். நிச்சயமாக சொல்கிறேன் 7வது முறையாக மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.