‘ஜெயிலில் ஊழலை ஒழித்துவிட்டுதான் வெளியே போவேன்னு சபதம் போட்டுள்ள டிஜிபியால அதிகாரிங்க ரொம்பவே ஷாக்காயிட்டாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘ஜெயில் டிப்பார்ட்மெண்ட் டிஜிபியாக இருப்பவரு வடமாநிலத்தை சேர்ந்த அதிகாரியாம்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயில் துறைக்கு அவரை மாற்றியிருக்காங்க.. சிறை நடைமுறை அவருக்கு பிடிக்காம இருந்திச்சாம்.. எப்படியும் ஒரு மாதத்தில் காக்கி துறைக்கு போயிடுவேன்னு சக அதிகாரிகளிடம் சொல்லியிருக்காரு.. இதனால சென்ட்ரல், மாவட்ட சிறை அதிகாரிகள் ரொம்பவே ஹேப்பியா இருந்திருக்காங்க.. ஆனா அந்த டிஜிபியோ, சிறை சட்டதிட்டங்களை நன்றாக படிச்சிருக்காரு.. நாட்கள் ஆக ஆக அவருக்கு ஜெயில் டிப்பார்ட்மெண்ட் பிடிச்சுப் போச்சாம்.. கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களில் நடக்கும் ஊழல், எப்படியெல்லாம் மோசடி செய்கிறார்கள் என்பதை உளவுப் பிரிவு மூலம் தெரிஞ்சிக்கிட்டாராம்.. இதனை முற்றிலும் ஒழித்துவிட்டுதான் வெளியே போவேன்னு சபதம் போட்டிருக்காரு.. எந்த தவறு செய்தாலும் உடனடியாக சஸ்பெண்ட், துறை ரீதியாக விசாரித்து டிஸ்மிஸ்னு நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருக்காரு.. இதனை தெரிஞ்சிக்கிட்ட அதிகாரிகள் ரொம்பவே ஷாக்காயிட்டாங்களாம்.. ஒரு மாதத்தில் இடம் காலியாகும், மீண்டும் சாம்ராஜ்யம் நடத்தலாமுன்னு இருந்தோமே, ஆனால் இப்படி ஆகிப்போச்சேன்னு புலம்பும் நிலைக்கு வந்திருக்காங்களாம்.. இதில் சில அதிகாரிகளின் சொத்து குறித்த கணக்கெடுப்பும் நடந்திருக்காம்.. அதில் மலைத்துப்போகும் அளவுக்கு இருப்பதாக வார்டர்கள் பேசிக்கிறாங்க… அவர்கள் மீது விஜிலென்சில் புகார் செய்ய இருப்பதாகவும் சொல்றாங்க.. இதனால இப்போ ஜெயில் ஆபீசர்ஸ் மிகுந்த நடுக்கத்துடனேயே சிறை பணியை செய்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சீட்டாட்ட கும்பலிடம் மூன்று லகரத்தை ஆட்டைய போட்ட காவலர்களால் சில உயர் அதிகாரிங்க ஆடிப்போயிட்டாங்களாமே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஈரோடு மாவட்டத்தில் வாடின்னு முடியும் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் எஸ்.ஐ ஒருவர், தனிப்பிரிவு ஏட்டு ஒருவர் என இருவரும் கரன்சி வசூலில் படு கில்லியாக செயல்பட்டு வந்தாங்க.. கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் கூட்டாக ரெய்டு சென்று, சீட்டாட்ட கும்பலிடம் இருந்து ₹3 லட்சத்தை பறிமுதல் செய்திருக்காங்க.. இதை, கணக்கில் கொண்டு வராமல், அப்படியே ஆட்டைய போட்டு விட்டாங்களாம்.. இந்த விவகாரம், மாவட்ட எஸ்.பி.,க்கு ெதரியவர, அவர் அதிரடியாக இருவரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவு போட்டுருக்காரு.. இருவரும் இதற்கு முன்பு எங்கெங்கு, எவ்வளவு காசு பார்த்தார்கள் என்ற பட்டியலையும் தயாரிக்க சொல்லி இருக்கிறாராம்.. இவர்கள் மூலமாக மேலதிகாரிகள் யார் யாருக்கு பங்கு போனது, அப்படி பங்குத்தொகை கொடுத்தால், எவ்வளவு கொடுத்தார்கள் என்ற பட்டியலையும் தயாரிக்க சொல்லி உத்தரவாம்.. அதனால், சில உயரதிகாரிகள் ஆடிப்போய் இருக்காங்களாம்.. இந்த விவகாரத்தில் இன்னும் எத்தனை தலை உருளப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எகிறிகிட்டு இருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சகோதரர் மூலம் எடுத்த முயற்சி தோல்வியால் டெல்டாவில் நேரிடையாக களத்தில் இறங்க சின்ன மம்மி முடிவாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் மீண்டும் இணைந்து விடலாம்னு சின்னமம்மி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், எதுவும் எடுபடவில்லை. மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர் மூலம் ‘சில வேலைகளும்’ திரைமறைவில் நடந்ததாம்… அதுவும் பெரிதாக சின்னமம்மிக்கு கைகொடுக்கவில்லை. இதனால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் சின்னமம்மி குழப்பத்தில் இருந்து வருகிறாராம்… தொடர்ந்து, ‘விட்டமின் ப’ மூலம் சாதித்து விடலாம்னு அவர் எண்ணுகிறாராம்.. இதற்கான வேலைகள் தற்போது துவங்கியுள்ளதாம்… இது கை கொடுக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்காம்.. இதுவும் ஒருவேளை கை கொடுக்காவிட்டால், டெல்டா மாவட்டத்தில் நேரிடையாக களத்தில் இறங்க சின்னமம்மி முடிவு செய்து இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பணி மாறுதல் செய்தும் போக மாட்டேன் என அடம் பிடிக்கிறாராமே ஒரு அதிகாரி..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர் மாவட்டத்தில் உள்ள முதல்படை வீடு கோயில் அலுவலகத்தில் சர்வ வல்லமை படைத்தவராக வலம் வந்த அதிகாரி குறித்து மேலிடத்திற்கு பல்வேறு புகார்கள் குவிந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் மேலதிகாரி ஒருவர் வந்து ஆய்வு நடத்தியுள்ளார். இதில், கோயில் அதிகாரி மீதான புகார் உறுதியானதாம். மேலும், இவர் இலைக்கட்சி மாஜிக்கள் ஆதரவு பெற்றவர் என பரவலாக பேச்சு உள்ளது. இதையடுத்து கோயில் அதிகாரி நெற்களஞ்சிய மாவட்டத்திற்கு அதிரடியாக பணி மாறுதல் செய்யப்பட்டார். ஆனால், அங்கிருந்து போகமாட்டேன் என அழாத குறையாக அடம் பிடித்து வருகிறாராம். நான் எப்படியும் இடமாறுதலை ரத்து செய்து விடுவேன் என கோயில் ஊழியர்கள் உட்பட பலரிடமும் கூறி வருகிறார். இதுதான் முதல்படை வீட்டில் தற்போது முக்கியமான பேச்சாக உள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
The post நேரடியாக களத்தில் இறங்க சின்ன மம்மி எடுத்திருக்கும் முடிவு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.