
சென்னை,
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. 'இந்தியன் 2' படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தாலும், 'இந்தியன் 3' படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இதற்கிடையில் இயக்குனர் ஷங்கர் 'இந்தியன் 3' படத்தில் ல் ஏற்கனவே படம்பிடிக்கப்பட்ட காட்சிகளில், ஒரு சில மாற்றத்தை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக நடிகர் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒரு சில நாள்களில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், 'இந்தியன் 2' படத்தின் வசூல் ரீதியான தோல்வியால் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக 'இந்தியன் 3' படத்தை அவர்கள் குறைந்த விலைக்குக் கேட்பதாகவும் கூறப்பட்டது. இதனால், 'இந்தியன் 3' படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.