நேரடி கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல் மணிகளை தஞ்சை சேமிப்பு கிடங்குகளுக்கு உடனடியாக அனுப்பி வைப்பு

3 hours ago 1

*இரவு நேரங்களில் பனியால் பாதிப்பதைத் தடுக்க நடவடிக்கை

*விவசாயிகள் காத்திருக்காமல் விற்பனை செய்யவும் வசதி

வல்லம் : தஞ்சாவூர் அருகே வல்லம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் பிடிக்கப்படும் நெல்கள் உடனுக்குடன் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு நெல் சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது.தஞ்சை மாவட்டத்தில், சம்பா அறுவடைப்பணிகள் இயந்திரம் மூலம் தீவிரமாக இரவு பகலாக நடந்து வருகின்றன.

இதில், வல்லம், 8நம்பர் கரம்பை, சிவகாமிபுரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி போன்ற பகுதிகளில் சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் தொடர்ந்து பெய்த மழை மற்றும் கடந்த மாதம் பருவம் தவறி பெய்த மழை ஆகியவற்றால் சம்பா பயிர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டது. அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் வயலில் சாய்ந்தன.

மேலும், கடும் பனிப்பொழிவால் விவசாய நிலங்கள் ஈரப்பதமாக இருந்தது. மழை தொடர்ந்து பெய்தால் வயலில் சாய்ந்த பயிர்கள் முளைத்து விடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் இருந்தனர். ஆனால் மழை பெய்யவில்லை. இருப்பினும் பனிப்பொழிவு மட்டும் அதிகம் இருக்கிறது. இதனால் கூடுதல் வாடகை கட்டணம் கொடுத்து பெல்ட் அறுவடை இயந்திரங்களை கொண்டு விவசாயிகள் தற்போது சம்பா நெல்லை அறுவடை செய்து உடனுக்குடன் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருகின்றனர்.

விவசாயிகள் தங்களின் நெல்லை விற்பனை செய்ய ஏதுவாக வல்லம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை சித்திரக்குடி பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விவசாயிகள் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் இரவு நேரத்திலும் அறுவடை பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் உடனுக்குடன் பிடித்தம் செய்கின்றனர். ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் தினமும் 600 முதல் 800 மூட்டைகள் வரை நெல் மூட்டைகள் பிடிக்கப்படுகின்றன. விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை தூற்றிய பின் நெல் பிடிக்கப்படுகிறது.

இதில் ஆலக்குடி, கல்விராயன்பேட்டை பகுதியில் தற்போது அறுவடைப்பணிகள் வெகு மும்முரமாக நடந்து வருவதால் நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் இரவு 7 மணி வரை நெல்லை சுத்தம் செய்து கொள்முதல் செய்கின்றனர். மேலும் தற்போது காலை, இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்காமல் உடனுக்குடன் லாரிகள் வாயிலாக நெல் தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதனால் அடுத்தடுத்து விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடிகிறது. விவசாயிகளும் காத்திருக்கும் நிலை இல்லாமல் உள்ளது.
அதேபோல், மாரியம்மன் கோவில், புலவர்நத்தம், கோவிலூர், சாலியமங்கலம், அம்மாபேட்டை, பாபநாசம், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் அறுவடை செய்யும் நெல்கள் அனைத்தும் விற்பனை செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்கள் அனைத்தும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் கொள்முதல் செய்யப்படும் நெல்கள் அனைத்தும் தேக்கம் இல்லமால் உடனே பணியார்கள் அதனை லாரியில் ஏற்றி விடுகின்றனர். இதனால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் இல்லாமல் உள்ளது.

The post நேரடி கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல் மணிகளை தஞ்சை சேமிப்பு கிடங்குகளுக்கு உடனடியாக அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article