நெல்லையில் வேகமாக நிரம்பும் அணைகள்... தாமிரபரணியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு

6 months ago 22

நெல்லை,

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் நெல்லை மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களாக நெல்லையில் அதிகனமழை பெய்தது. அம்பை, சேரன்மாதேவி, முக்கூடல், நெல்லை, பாளையங்கோட்டை, மானூர், களக்காடு, நாங்குநேரி, வள்ளியூர், திசையன்விளை, ராதாபுரம், மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

அதேபோல, மேற்கு தொடர்ச்சி மலையில் மணிமுத்தாறு அணைக்கு மேலே அமைந்துள்ள மாஞ்சோலை, பாபநாசம், சேர்வலாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 6,427 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடி 624 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 28 அடி உயர்ந்துள்ளது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டமும் உயர்ந்து 90 அடியை எட்டியது.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி அணைகளின் உபரி நீரும் இணைந்து திருப்புடைமருதூரில் தாமிரபரணி ஆற்றில் வந்து சேர்ந்தது. இதுதவிர காட்டாற்று வெள்ளம், ஊர்க்காட்டில் பெய்த மழை தண்ணீர் ஓடைகள் வழியாகவும், குளங்கள் நிரம்பி மறுகால் தண்ணீர் காட்டாறுகள் வழியாகவும் ஆற்றில் கலந்து ஓடுகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றுக்குள் உள்ள குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது. ஆற்றில் 2-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது ஆற்றில் 56 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

மேலும் ஆற்றங்கரையில் உள்ள தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகளில் வாகன போக்குவரத்தும் குறைந்தே காணப்பட்டது.

 

Read Entire Article