
நெல்லை மாவட்டம், பணகுடி பகுதியில், கடந்த 5.5.2025 அன்று காவல்கிணறு விலக்கு அருகே நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், தனியார் பெட்ரோல் பங்க் ஊழியர், பெட்ரோல் பங்கில் விற்பனையான பணத்தினை தனது மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு வங்கியில் செலுத்துவதற்காக சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் அவரைத் தாக்கி, அவரிடம் இருந்த ரூ.36 லட்சத்து 6 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
இது தொடர்பாக பணகுடி காவல் நிலையத்தில் கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 7.5.2025 அன்று இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 நபர்கள் கைது செய்யப்பட்டு, இக்குற்றத்தில் தொடர்புடைய ஒரு இளஞ்சிறாரும் கையகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து, நேற்று (8.5.2025) முக்கிய குற்றவாளிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு பெண் குற்றவாளியும் அடங்குவார். இவ்வழக்கில், இன்று (9.5.2025) மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த பணம் கொள்ளை வழக்கில் இதுவரை ஒரு பெண் உட்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு இளஞ்சிறார் கையகப்படுத்தப்பட்டுள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் ராமநாதபுரம், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். கொள்ளையடிக்கப்பட்ட ரூ.36 லட்சத்து 6 ஆயிரம் பணத்தில் இதுவரை ரூ.28 லட்சத்து 1 ஆயிரம் (இருபத்தெட்டு லட்சத்து ஒரு ஆயிரம் ரூபாய்) பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்ற சம்பவம் நடைபெற்ற சுமார் 50 மணி நேரத்தில் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களை துரிதமாக அடையாளம் கண்டு கைது செய்த வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேஷ் மற்றும் தனிப்படை காவலர்களை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.