நெல்லை: நெல்லையில் நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டத்தில் இளைஞர் அணி பாசறை நிர்வாகி, தொகுதி செயலாளர்களை சீமான் ஒருமையில் பேசியதால் தள்ளு முள்ளு, சலசலப்பு ஏற்பட்டது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். இதையொட்டி பாளை. நீதிமன்றம் எதிரே ஒரு திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன்பாக பங்கேற்க வந்த நிர்வாகிகள், தொண்டர்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வாங்கி வைக்கப்பட்டது. இது அவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைதொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சீமான், வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து பேசினார். கட்சியின் நிர்வாகிகள் யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நெல்லை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன் எழுந்து பேச முயற்சித்தார். அப்போது, ‘இது என் கட்சி, இங்கு நான் மட்டும்தான் பேசுவேன்’ எனக்கூறிய சீமான் அவரை நோக்கி, ‘நீ யார், சாதிய அடிப்படையில் செயல்படுகிறாய், வெளியே போ’ என அவரை ஒருமையில் திட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், ‘பார்வீன் கடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் நல்லமுறையில் கட்சி பணியாற்றிவர். யாரோ ஒருவர் கூறியதை வைத்து அவரை திட்டுவது சரியல்ல. சாட்டை துரைமுருகன் கூட சாதிய ரீதியில் பேசி வருகிறார். அவரை நீங்கள் கண்டிக்கவில்லையே’ எனக் கூறியதை தொடர்ந்து, அந்ேதாணி விஜயையும் நீயும், வெளியோ போ என சீமான் ஒருமையில் திட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகன் கெட்டவார்த்தையால் திட்டி அவரை அடிக்க பாய்ந்ததால் கூட்டத்தில் சலசலப்பு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைதொடர்ந்து கூட்டத்தை விட்டு மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், அம்பை தொகுதி பொறுப்பாளர் சார்லஸ், ராதாபுரம் தொகுதி துணைத் தலைவர் சந்திரமோகன், பாளை. கிழக்கு ஒன்றிய செயலாளர் அரசகுமார் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பாதியில் வெளியேறினர்.
சர்வாதிகாரியானதான் கட்சியை நடத்த முடியும்: சீமான் புது விளக்கம்
நெல்லை விகேபுரம் தனியார் திருமண மண்டபத்தில் சீமானை மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது சீமான் நிருபர்களிடம் கூறுகையில், ‘மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றவிடாமல் தடுப்பதற்காக எனது தலைமையில் வரும் டிசம்பர் மாதம் மாஞ்சோலைக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும்’ என்றார். தொடர்ந்து, நெல்லை ஆலோசனை கூட்டத்தில் நடந்த மோதல் பற்றி கேட்டபோது, கட்சியின் தலைவர் என்பவர் அன்பான சர்வாதிகாரியாக இருந்தால் மட்டுமே கட்சியை வழி நடத்த முடியும்’ என்றார்.
The post நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சீமான்-நாதக நிர்வாகிகள் நேருக்கு நேர் மோதல் : கெட்ட வார்த்தைகளால் திட்டி கட்சியினரை அடிக்க பாய்ந்த சாட்டை துரைமுருகன் appeared first on Dinakaran.