நெல்லை: நெல்லையில் தொழுகை முடிந்து திரும்பியபோது, ஓய்வு பெற்ற எஸ்.ஐ வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இருவர் நெல்லை கோர்ட்டில் சரணடைந்தனர். நெல்லை டவுன் தொட்டி பாலத்தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகீர்உசேன் பிஜிலி (58). இவர் அப்பகுதியிலுள்ள முர்தீன் ஜஹான் தைக்கா பரம்பரை முத்தவல்லியாக இருந்து வந்தார். இவருக்கு அஜினீஸ் நிஷா என்ற மனைவியும், இஸிர் ரஹ்மான் என்ற மகனும், மொஸிசா பியாஸ் என்ற மகளும் உள்ளனர்.
மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். ஜாகிர் உசேன் பிஜிலி நேற்று அதிகாலை ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அருகேயுள்ள ஜாமியா தைக்கா பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். டவுனில் உள்ள காஜா பீடி அலுவலகம் அருகே வந்தபோது மர்ம கும்பல் இவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடிவிட்டது. தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
தகவலறிந்த நெல்லை போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி, மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கீதா, உதவி கமிஷனர் அஜிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த முஸ்லிமாக மதம் மாறி திருமணம் செய்து கொண்ட தெளபிக் என்ற கிருஷ்ணமூர்த்திக்கும், ஜாகிர்உசேன் பிஜிலிக்கும் 30 சென்ட் வக்பு இடம் தொடர்பான பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.
இதுதொடர்பான வழக்கில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஜாஹிர்உசேன் பிஜிலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் வக்பு சொத்து தொடர்பான முழு புள்ளி விவரங்களையும் இவர் சேகரித்து வந்தது கிருஷ்ணமூர்த்திக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜாகீர்உசேன் பிஜிலி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து நெல்லை டவுன், பேட்டை பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஜாகிர் உசேனின் மனைவி அஜினீஸ் நிஷா புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியைச் சேர்ந்த 2 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் தச்சநல்லூர், பால்கட்டளை வடக்கு தெருவைச் சேர்ந்த கார்த்திக் (32), டவுன் தொட்டிப் பாலத் தெருவைச் சேர்ந்த அக்பர்ஷா (32) ஆகிய இருவர் நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண்-3ல் நேற்று சரணடைந்தனர். அவர்கள் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
கொலை செய்யப்பட்ட ஜாகிர்உசேன் மனைவி அஜீனிஸ் நிஷா மற்றும் அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். அப்போது, கொலை சம்பவத்திற்கு டவுன் போலீசார் சரியான நடவடிக்கை மேற்கொள்ளாததே காரணம் எனவும், இவர்கள் விசாரணை நடத்தினால் முறையாக நடைபெறாது எனவும் குற்றம் சாட்டினர். மேலும் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய நெல்லை போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி, முக்கிய குற்றவாளிகள் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் நேர்மையாக நடைபெறும் என உறுதி அளித்தார். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரமாக நடந்த முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
* கலைஞரின் பாதுகாப்பு அதிகாரி
கொலையான ஜாஹீர்உசேன் பிஜிலி 25 ஆண்டுகளாக சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். முன்னாள் முதல்வர் கலைஞரின் கோபாலபுரம் வீட்டிலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், மேயர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது அவரது தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* ‘என்னை கொன்று விடுவார்கள்’ மாஜி எஸ்ஐ வெளியிட்ட வீடியோ வைரல்
நெல்லை டவுனில் நேற்று கொலை செய்யப்பட்ட முன்னாள் எஸ்ஐ ஜாகிர் உசேன் பிஜிலி, கொல்லப்படுவதற்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: என் மீது கொலை மிரட்டல் ஒருத்தர் இரண்டு பேர் இல்லை. ஒரு கூட்டு கும்பலே சேர்ந்து 20 மற்றும் 30 பேர் சேர்ந்து என்னை கொலை பண்ண வேண்டும் என்று சுற்றிக் கொண்டு இருக்கின்றனர்.
அதில் முக்கியமான நபர் தவுபீக். இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்திற்கு மாறி வந்தவர். எதற்கு அவர் வந்தார் என்றால் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வந்துள்ளார். அந்த இடத்திற்கு குமாஸ்தா என்றும் வக்கீல் என்றும் கூறிக்கொண்டு சுற்றி வருகிறார். இந்த கொலை மிரட்டலுக்கு முக்கிய காரணம் நெல்லை டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், டவுன் போலீஸ் உதவி கமிஷனர் செந்தில்குமார் இந்த இரண்டு பேர் தான், இந்த கொலையை ஊக்குவித்து வருகின்றனர்.
நான் கொடுத்த புகார் மனுக்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துள்ளனர். இவர்கள் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். தவுபீக் தன் பெயர் கிருஷ்ணமூர்த்தி என்று கூறி இந்த சிவில் பிரச்னையில் பொய் புகாரை காவல் நிலையத்தில் அளித்து, என் மீதும், என் மனைவி மீதும் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (பிசிஆர் வழக்கு) போட்டுள்ளனர். இப்போது எனக்கு கொலை மிரட்டல், பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறேன். சாக போகிற நான் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம்.
எப்படியும் என்னை கொன்று விடுவார்கள் என எனக்கு தெரியும். காரணம் என்னவென்றால் 36 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். போலி பத்திரங்கள் போட்டது மற்றும் கொலை மிரட்டல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. எனக்கு எதிரான எதிரிகளை போலீசார் ஒன்று சேர்த்துள்ளனர். என்னுடைய லெட்டர் பேடில் போலியாக என் கையெழுத்து போட்டு மின்சார வாரியத்தில் கொடுத்துள்ளனர்.
ஆனால் விடாமல் மின்வாரியத்திற்கு ஆன்லைன் மூலம் பதிலளித்து போராடி பழைய பெயருக்கு மாற்றம் செய்துள்ளனர். நான் கொடுத்த வழக்குகள் டிஸ்போஸ் என்று தகவல் வந்துள்ளது. டவுன் போலீஸ் உதவி கமிஷனர் செந்தில்குமார் என்னிடம் சமாதானம் பேசினார். ஆனால் அதற்கு மறுத்து விட்டேன். என்னுடைய வக்கீலின் தந்தைக்கு போனில் தவுபீக் மிரட்டி வருகிறார். இவ்வாறு கூறியுள்ளார். நேற்று காலை ஜாகீர் உசேன் பிஜிலி கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
The post நெல்லையில் தொழுகை முடிந்து திரும்பியபோது ஓய்வு பெற்ற எஸ்.ஐ வெட்டிக்கொலை: இருவர் கோர்ட்டில் சரண், காவல் நிலையம் முற்றுகை appeared first on Dinakaran.