நெல்லை: நெல்லையில் திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு நடந்த திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடந்தது. தமிழ்நாடு அரசு திருநங்கைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், நெல்லை மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் சுய உதவிக் குழு மானியம், தேவையின் அடிப்படையில் கல்வித் தகுதியின் அடிப்படையில் திறன் வளர்ப்பு பயிற்சி, கூட்டுறவுத்துறை சார்பில் சுயதொழில் புரிய கடனுதவி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் ரேஷன் கார்டு, மாவட்ட திட்ட அலுவலகம் சார்பில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் ஓய்வூதியம், தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆட்டோ ரூ.1 லட்சம் வரை ஆட்டோ மானியம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சார்பில் ஆதார் அட்டை, வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனைப் பட்டா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வீடு, மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருநங்கை அடையாள அட்டை, தையல் இயந்திரம் ஆகிய திருநங்கைகளுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான நடனப்போட்டி, அழகிப் போட்டி ஆகியவை நடந்தது. இந்த போட்டிக்காக திருநங்கைகள் விதவிதமான ஆடைகளில் ஒய்யாரமாக வலம் வந்தனர். அழகிப் போட்டி போன்று தத்ரூபமாக ஆடைகளும், அலங்காரமும் செய்து வந்து திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பேச்சுப்போட்டி, சமையல் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு பரிசுகளும், சுயதொழில் சிறப்பாக செய்து வரும் திருநங்கைகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் கலெக்டர் சுகுமார் வழங்கினார்.
The post நெல்லையில் திருநங்கைகளுக்கு அழகிப்போட்டி appeared first on Dinakaran.