திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கொட்டப்பட்ட கேரள கழிவுகளை அகற்றும் பணி 2-வது நாளாக இன்று (டிச.23) நீடித்தது. திருநெல்வேலி அருகே கோடகநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தமிழகம் மற்றும் கேரளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவ கழிவுகளை கேரள அரசே அகற்ற வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து கழிவுகளை அள்ளி லாரிகளில் எடுத்துச் செல்லும் பணிகள் நேற்று தொடங்கியது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் உதவி ஆட்சியர் சாஷ்ஷி, சுகாதாரத் துறை அலுவலர் கோபகுமார் மற்றும் கேரள சுகாதாரத்துறை வருவாய்த்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுவினர் இந்த பணிகளை மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்ட அதிகாரிகள் குழு அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டது. இந்நிலையில் நேற்று மாலையில் கொண்டாநகரம் செல்லும் காட்டுப்பாதையில் கழிவுகளை அள்ளி எடுத்துவந்த லாரி மண்ணில் சிக்குண்டது. இதனால் கொண்டா நகரம் பகுதியில் கழிவுகளை அகற்றும் பணிகள் தாமதமாகியது.