நெல்லை மாவட்டத்தில் மருத்துவ கழிவு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் சரமாரி கேள்வி

2 days ago 1

சென்னை: நெல்லை மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய மருத்துவமனைகள், ரிசார்ட்க்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கமளிக்கும்படி, கேரள அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்டுள்ளதாக வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீர்ப்பாயத்தின் உத்தரவின் அடிப்படையில், நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக கூறி, கேரள அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஏழு நாட்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதன் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், மருத்துவமனைகளுக்கு எதிராக அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க வழங்கிய ஏழு நாள் அவகாசம் முடிந்த பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கேரளா அரசு தெரிவிக்கவில்லை என்றும் விதிமீறல் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்தது. அதுமட்டுமின்றி, மனித கழிவுகள் கொண்டு வரப்பட்ட விவகாரம் தொடர்பாக, இரு மாநில அரசுகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதை கேரள அரசு நிறுத்த வேண்டும். மேலும் தமிழக எல்லை மாவட்டங்களில் சிறப்பு அதிரடிப்படையை அமைத்து கழிவுகள் கொண்டு வரப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட தீர்ப்பாயம், வழக்கின் விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

The post நெல்லை மாவட்டத்தில் மருத்துவ கழிவு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article