நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலி; அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின: மீண்டும் முளைப்பதால் விவசாயிகள் கவலை

3 months ago 12

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் மீண்டும் முளைக்க துவங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.  நெல்லை மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பரில் அதி கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு, ேசர்வலாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல இடங்களில் குளங்கள் உடைந்ததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இயல்பு நிலை திரும்பிய நிலையில், குளங்களில் இருந்த நீரிருப்பை கொண்டு விவசாய பணிகள் நடந்தன.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்ததால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் ஓரளவு நீரிருப்பு காணப்பட்டதையடுத்து கடந்த ஜூலை 2வது வாரத்தில் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் கார் பருவ சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்றது. முதலில் விவசாய பணிகள் தொடங்கப்பட்ட அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, முக்கூடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடை முடிந்துள்ளது. தற்போது நெல்லை மாநகரை சுற்றியுள்ள பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நடந்து வந்தன.

இதனிடையே கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நன்கு வளர்ந்திருந்த நெற்கதிர்கள், வயலில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. அருகன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரில் மூழ்கிய நெற்கதிர்கள் மீண்டும் முளைக்க தொடங்கி இருப்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த முறை வெள்ளத்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் தண்ணீரால் மணல் அடித்து வரப்பட்டு விளைநிலங்கள் மூடி விட்டன. தாமிரபரணி ஆற்றங்கரையோரப்பகுதிகளில் விளைநிலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படன. அதிகனமழையால் நெற்பயிர்கள் சேதமடைந்தது மட்டுமின்றி, விளைநிலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு மண்வளம் குறைந்தது.

சேதமடைந்த பயிர்கள் மண்ணோடு மண்ணாக மக்கிய நிலையில் விளைநிலங்களை மீண்டும் சாகுபடிக்கு தயார்படுத்துவது என்பது விவசாயிகளுக்கு சவாலானதாக இருந்தது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் குளங்களில் இருந்து மண்ணை கொண்டு வந்து விளைநிலங்களில் போட்டு சமப்படுத்தி மீண்டும் சாகுபடிக்கு செய்யும் அளவுக்கு தங்களது நிலங்களை தயார் செய்தனர். தற்போது நெல் மணிகள் செழித்து வளர்ந்திருந்த நிலையில் அறுவடைக்குள் மழை பெய்து எங்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. ஓரிரு நாள் மழை நின்றால் கூட தண்ணீரை வடிய வைத்து நெல் மணிகளை அறுவடை செய்து வீட்டி ற்கு எடுத்துச் சென்று விடுவோம். அதற்கு வருண பகவான் கருணை காட்ட வேண்டு மென விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

The post நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலி; அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின: மீண்டும் முளைப்பதால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Read Entire Article