நெல்லை, ஜன. 12: தொடர் விடுமுறையால் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. தென்காசிக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் நடைமேடையில் வீகேபுதூர், சோலைத்தெருவைச் சேர்ந்த மணிமேகலை (51) என்பவர் காத்திருந்தார். மாலை 3.30 மணியளவில் தென்காசி செல்லும் பஸ்சில் மணிமேகலை ஏறியபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது பேக்கில் இருந்த பர்சை மர்மநபர் திருடிச் சென்றார். பர்சில் ரூ.5000, ரூ.10ஆயிரம் மதிப்புள்ள காசோலை, 5 ஏடிஎம் கார்டுகளும் திருடு போனதால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அவசர போலீஸ் 100ல் புகார் அளித்தார். மேலப்பாளையம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது மேலும் 3 பேர் தங்களிடமும் மர்ம நபர்கள் நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுவிட்டதாக புகார் அளித்தனர். இதில் ஒரு பயணியிடம் இருந்து கட்டைப்பையை அறுத்து அதிலிருந்த தங்க செயின், 1 செல்போன் திருடு போனதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து சிஎஸ்ஆர் எனப்படும் சமூக சேவை பதிவேட்டில் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் 2 பேர் புகார் அளித்துச் சென்றனர்.மேலப்பாளையம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் 4 பேரிடம் நகை, பணம் அபேஸ் appeared first on Dinakaran.