நெல்லை, தென்காசியில் தொழிலதிபர் வீடு உட்பட 16 இடங்களில் ஐடி ரெய்டு: ஊழியர்களிடம் துருவி துருவி விசாரணை

1 week ago 3


நெல்லை: நெல்லை அருகே ஏற்றுமதி தொழில் செய்து வரும் தொழிலதிபர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 16 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். நெல்லை, வண்ணார்பேட்டை, இந்திரா காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் மாட்டு எலும்புகளை அரைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, பூக்கள், கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்வது என வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொழில் செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், மதுரையில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று காலை வெங்கடேஷ் வீடு மற்றும் அலுவலகம், குவாரி, குடோன்கள் என நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியில் உள்ள 16 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் வண்ணார்பேட்டையில் உள்ள வெங்கடேஷின் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று காலை 8 மணிக்கு ஒரே நேரத்தில் புகுந்த அதிகாரிகள், அங்கு வேலை செய்த பணியாளர்கள் உட்பட அனைவரது செல்போன்களையும் கைப்பற்றி சுவிட்ச் ஆப் செய்தனர். சமீபத்தில் அலுவலகத்திற்கு வந்து சென்றவர்கள் யார் யார்? புதிய நபர்கள் வந்தார்களா? என பணிப்பெண் உள்ளிட்டோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.
அலுவலகத்தின் மாடியில் ரகசியமாக அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர். இந்த சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post நெல்லை, தென்காசியில் தொழிலதிபர் வீடு உட்பட 16 இடங்களில் ஐடி ரெய்டு: ஊழியர்களிடம் துருவி துருவி விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article