
நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள டீக்கடை, பழக்கடைகளில் அதிகாலையில் கடைகள் திறப்பதற்கு முன்பாகவே பால் பாக்கெட்டுகளை மொத்தமாக வினியோகஸ்தர்கள் கடை முன்பு வைத்துவிட்டு செல்வது வழக்கம். தற்போது டீக்கடைகளை குறிவைத்து அதிகாலையில் வைத்து செல்லப்படும் பால் பாக்கெட்டுகளை மர்ம நபர் ஒருவர் திருடிச்செல்லும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அதிகாலையில் பால்பாக்கெட்டுகள் வைத்து செல்லப்பட்டவுடன், அதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் அவற்றை தனது மொபட்டில் திருடிச்சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வந்த ஒருவர் சத்தம் போடவே, அந்த மர்ம நபர் பால் பாக்கெட்டுகளை அங்கேயே போட்டுவிட்டு, தான் கொண்டு வந்த மொபட்டையும் போட்டு விட்டு தப்பியோடினார்.
அதே மர்ம நபர் வண்ணார்பேட்டையில் இருந்து முருகன்குறிச்சி நோக்கி செல்லும் திருவனந்தபுரம் சாலையில் மற்றொரு மொபட்டில் வந்துள்ளார்.
அங்குள்ள ஒரு டீக்கடையின் முன்பு மொபட்டை நிறுத்திய அந்த நபர், அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 30 லிட்டர் பால் பாக்கெட்டுகளை திருடிச் சென்றார். இதுதொடர்பான காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனம் திருட்டு வாகனமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் மர்மநபரை போலீசார் உடனடியாக பிடிக்க வேண்டும் என்று டீக்கடைக்காரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.