நெல்லை : நெல்லை – சென்னை வந்தடைந்த வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவில் வண்டுகள் செத்து கிடந்த வீடியோ வைரலாகி வருகிறது. நெல்லையில் இருந்து சென்னைக்கு வாரம்தோறும் 6 நாட்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து இன்று காலை இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழக்கம் போல் காலை உணவு வழங்கப்பட்டது. அதில் சாம்பாரில் வண்டுகள் செத்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் உணவு வழங்கும் ஊழியர்களிடம் வண்டுகளை காண்பித்து முறையிட்டனர்.
அவர்கள் பயணிகளை சமரசம் செய்துள்ளனர். சாம்பாரில் கிடந்த வண்டுகளை காண்பித்து சக பயணிகளும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் ஊழியர்கள் மன்னிப்பு கேட்டனர்.இதனிடையே சாம்பாரில் வண்டு கிடந்தது குறித்து பயணிகள் ஆதாரத்தோடு பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வந்தே பாரத் ரயில் கட்டணம் அதிகம் என்றும் அதில் உணவுக்காக ரூ.200 கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் வந்தேபாரத் ரயிலில் வழங்கிய சாம்பாரில் கிடந்த வண்டுகளை பயணிகள் பலர் கடுகு என நினைத்து சாப்பிட்டு விட்டதாக வேதனை அடைந்துள்ளனர்.
The post நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலில் காலை உணவாக வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டுகள் கிடந்ததால் பயணிகள் அதிர்ச்சி!! appeared first on Dinakaran.