நெல்லை ‘இருட்டுக் கடையை’ வரதட்சணையாக கேட்ட புகார் கணவர் வெளிநாடு தப்புவதை தடுக்க ‘லுக்அவுட்’ நோட்டீஸ்: அல்வா கடை உரிமையாளர் மகள் போலீஸ் கமிஷனரிடம் புதிய மனு

4 hours ago 2

நெல்லை: நெல்லை டவுன் ‘இருட்டுக் கடை’ அல்வா கடையை வரதட்சணையாக கேட்ட கோவை மாப்பிள்ளை வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் கடை உரிமையாளர் மகள் ஸ்ரீகனிஷ்கா புதிய மனு அளித்துள்ளார். நெல்லை டவுன் இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் கவிதாசிங். இவரது மகள் ஸ்ரீகனிஷ்காவிற்கும், கோவையைச் சேர்ந்த பல்ராம்சிங் என்பவருக்கும் கடந்த பிப்.2ம் தேதி நெல்லை தாழையூத்தில் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்னர், ஸ்ரீகனிஷ்கா அவரது கணவருடன் கோவையில் வசித்து வந்த நிலையில், பல்ராம்சிங்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், அதை ஸ்ரீகனிஷ்கா கண்டித்ததால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மார்ச் 15ம் தேதி நெல்லையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு கனிஷ்கா வந்து விட்டார். மறுநாள் இரவு பல்ராம் சிங்கும், அவரது குடும்பத்தினரும், கவிதாசிங் வீட்டுக்கு வந்து, கனிஷ்காவுடன் வாழ வேண்டும் என்றால், கூடுதல் வரதட்சணை தர வேண்டும் என்றும், நெல்லை டவுன் இருட்டுக் கடையை பல்ராம்சிங் பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்றும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் கவிதாசிங்கின் மகள் ஸ்ரீகனிஷ்காவும், இப்பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தார். அதேவேளையில் பல்ராம்சிங் தரப்பில் தங்கள் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்திருந்தனர். இந்நிலையில் கவிதாசிங்கின் மருமகன் பல்ராம்சிங்கிடம் இந்த பிரச்னை தொடர்பாக விசாரிக்க பாளை அனைத்து மகளிர் போலீசார், ஏப்.21ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பினர். ஆனால் அன்று அவர் ஆஜராகவில்லை. பல்ராம்சிங் தரப்பில் வக்கீல் பரிமளம் சார்பில் அவரது ஜூனியர் கரும்பன் ஆஜரானார். தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பல்ராம்சிங் சென்றிருப்பதால் 10 நாட்கள் அவகாசம் கேட்டு அவர் தரப்பு வக்கீல் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தார்.

இதையடுத்து 10 நாட்கள் கழித்து போலீசார் கூறும் தேதியில் பாளை. அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பல்ராம்சிங் ஆஜராக வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இருட்டுக்கடை உரிமையாளர் மகள் ஸ்ரீகனிஷ்கா அளித்த மனுவில், ‘‘வரதட்சணை புகார் தொடர்பான விசாரணையில் பல்ராம்சிங் ஆஜராகாமல் வௌிநாடு தப்பிச் செல்வதை தடுக்க ‘லுக்அவுட்’ நோட்டீஸ் வழங்க வேண்டும். கோவை, சென்னை விமான நிலையங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து அவர் வெளிநாடு செல்வதை தடுக்க வேண்டும்.’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* லண்டன் தப்ப திட்டம்
இருட்டுக்கடை உரிமையாளர் மகள் ஸ்ரீகனிஷ்கா கூறுகையில், ‘‘வரதட்சணை புகாரில் விசாரணையை பல்ராம்சிங் தவிர்ப்பதற்காக லண்டனுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்கு அவர் தப்பிச் செல்வதை தடுக்க வேண்டும்.’’ என்றார்.

The post நெல்லை ‘இருட்டுக் கடையை’ வரதட்சணையாக கேட்ட புகார் கணவர் வெளிநாடு தப்புவதை தடுக்க ‘லுக்அவுட்’ நோட்டீஸ்: அல்வா கடை உரிமையாளர் மகள் போலீஸ் கமிஷனரிடம் புதிய மனு appeared first on Dinakaran.

Read Entire Article