மானூர்: நெல்லை அருகே சாலையோரத்தில் மீண்டும் மருத்துவக்கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி தீயிட்டு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து டிஎஸ்பி ரகுபதிராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
நெல்லையில் கடந்தாண்டு சுத்தமல்லி, கொண்டாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் கேரள மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.
இதன் எதிரொலியாக நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் மீண்டும் லாரிகளில் கேரளாவுக்கே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பி அனுப்பப்பட்டன. இடைத்தரகர்களாக செயல்பட்ட ஏஜென்டுகள், லாரி டிரைவர், கேரள மருந்து மேலாண்மை நிறுவன ஊழியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து பாளை. ரெட்டியார்பட்டி 4 வழிச்சாலை அருகே காலாவதியான மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மருத்துவ பிரதிநிதி ஒருவரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக்கழிவுகளை எரித்ததாக தற்காலிக பணியாளர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள மதவக்குறிச்சியில் மீண்டும் மருத்துவக்கழிவுகள் கொட்டி எரிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ரஸ்தாவில் இருந்து மதவக்குறிச்சி செல்லும் சாலையோரத்தில் மருத்துவக்கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி தீயிட்டு எரித்து உள்ளனர்.
இதில் காலாவதியான நரம்பியல் தொடர்பான நியூரோபியான் மருந்து பொருட்கள், டானிக் பாட்டில்கள், மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மருத்துவக் கழிவுகள் பொதுஇடத்தில் ஆபத்தான முறையில் அழிக்கப்பட்டு உள்ளன. தகவலறிந்த தாழையூத்து டிஎஸ்பி ரகுபதிராஜா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இதுதொடர்பாக விஏஓ சமுத்திரகனி அளித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவக்கழிவுகளை கொட்டி தீயிட்டு எரித்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். நெல்லையில் தொடர்ந்து நடக்கும் மருத்துவக்கழிவுகள் எரிப்பு சம்பவங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
‘‘நடவடிக்கை எடுக்கப்படும்’’
தாழையூத்து டிஎஸ்பி ரகுபதி ராஜா கூறுகையில், ‘காலாவதியான மாத்திரை அட்டைகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் எரிக்கப்பட்டு உள்ளன. இந்த மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றார்.
The post நெல்லை அருகே மீண்டும் மருத்துவக்கழிவுகள் எரிப்பு: டிஎஸ்பி விசாரணை appeared first on Dinakaran.