நெல்லை அருகே கீழப்பாட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் ரூ.19.98 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

7 hours ago 2

*கலெக்டர் சுகுமார், ரூபி மனோகரன் எம்எல்ஏ வழங்கினர்

நெல்லை : நெல்லை அருகே கீழப்பாட்டத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.19.98 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுகுமார், ரூபி மனோகரன் எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர். நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, கீழப்பாட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட பர்கிட் மாநகரில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. சுகாதாரத்துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள், விழிப்புணர்வு கண்காட்சி ஆகியவற்றை கலெக்டர் சுகுமார், ரூபி மனோகரன் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டதோடு ரூ.19.98 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

வருவாய்த்துறை சார்பில் ரூ.1.97 லட்சம் மதிப்பில் 3 பயனாளிகளுக்கு இணையவழி பட்டா, வரன்முறை பட்டாக்களும், ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை சார்பில் (மகளிர்திட்டம்) ரூ.3.50 லட்சத்தில் 4 பயனாளிகளுக்கு தொழில் தொடங்குவதற்கான கடனுதவிகளும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மின்கல தெளிப்பான் ஒரு பயனாளிக்கும்,

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ரூ.2,560 மதிப்பில் உளுந்து விதை ஒரு பயனாளிக்கும், கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.2.81 லட்சத்தில் 3 பயனாளிகளுக்கு பயிர்கடன்களும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சார்பில் 3 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளும்,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.6,690 மதிப்பில் ஒரு பயனாளிக்கு இலவச தையல் இயந்திரமும், தாட்கோ சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.8.06 லட்சம் மதிப்பில் கடனுதவிகளும், தோட்டக்கலைத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு கத்தரி நாத்தும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சத்தில் நுண் நிறுவன நிதிகடனுதவிகளும், பொது சுகாதாரத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 2 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம் என மொத்தம் ரூ.19.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 34 பேருக்கு கலெக்டர் சுகுமார், ரூபி மனோகரன் எம்எல்ஏ வழங்கினர். முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 132 மனுக்களில் 69 மனுக்கள் ஏற்கப்பட்டன. 63 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

முகாமில் கலெக்டர் சுகுமார் பேசுகையில் ‘‘முதல்வர் ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நெல்லை மாவட்ட விவசாயிகள் மண்வளம் தன்மை குறித்து அறிந்து அதற்கேற்ப விளைப்பொருட்களை விளைவிக்க வேண்டும். விவசாயிகள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கும் பால் உற்பத்தியினை பெருக்க வேண்டும்.

வேளாண்மைத் துறையின் மூலம் மண்வள அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசால் கல்வி திட்டங்களில் பல்வேறு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் ஏற்படுகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் கல்வி பயில ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

முகாமில், நெல்லை ஆர்டிஓ கண்ணா கருப்பையா, சமூக பாதுகாப்பு திட்டம் துணை கலெக்டர் ஜெயா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முகமதுஷா, மாவட்ட மேலாளர் (தாட்கோ) பாஸ்கர், மாவட்ட சமூக நல அலுவலர் தாஜூன்னிசா பேகம், மாவட்ட சுகாதார அலுவலர் கீதாராணி, பாளையங்கோட்டை தாசில்தார் இசைவாணி, பஞ். தலைவர்கள் கீழப்பாட்டம் துரைச்சி, நடுவக்குறிச்சி சுந்தரமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் தேவானை கனகராஜ், கீழப்பாட்டம் வார்டு உறுப்பினர் திருப்பதி மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post நெல்லை அருகே கீழப்பாட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் ரூ.19.98 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Read Entire Article