நெல்லிக்குப்பம், ஜூலை 4: நெல்லிக்குப்பம் அருகே சென்னை ஆயுதப்படை பெண் காவலர், வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், பட்டாலியன் காவலரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம், கொங்கராயனூர் பகுதியை சேர்ந்தவர் முகிலன் (29), கார் டிரைவர். இவரது மனைவி சோனியா (26). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் 6 வயதில் மகள் உள்ளார். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த சோனியா, ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்தார். வேலை நிமித்தமாக மகளை, தனது தாயிடம் விட்டுவிட்டு ேசானியா மட்டும் சென்னை ஆவடியில் தங்கி அங்குள்ள ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் கொங்கராயனூரில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக வீட்டில் இருந்த உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த காவலர் சோனியா தனது கைப்பட வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், வற்புறுத்தி வருத்தக்கூடாது எனக் கூறினேன். அதனால் நான் டிஎஸ்இயில் (ஆவடி) போட வேண்டாம் என்று கூறினேன். ஆனால் எனக்கு தினமும் டியூட்டி போட்டார்கள். மற்ற கர்ப்பிணி பெண்களை காட்டிலும் எனக்கு காப்பு வழிக்காவல் பணி போட்டார்கள். எனக்கு வயிறுவலி என்று கூறியபோதும் காப்பு வழிகாவல் பணி போட்டுக் கொண்டிருந்ததால் எனக்கு கருக்கலைந்து விட்டது. மிகுந்த மனஉளைச்சல், உடல்நிலை காரணமாகவும் விடுப்பு வாங்கிக் கொண்டு ஊருக்கு வந்துவிட்டேன்.
நான் கணவரை பிரிந்து வாழ்வதாலே என்னை தவறான பெண் என்று ஒருதலைபட்சமாக விசாரிக்கிறார்கள். ராஜீ என்பவர் என்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைக்கூறி உடலை மட்டும் அனுபவித்து என்னை ஏமாற்றி விட்டார். ராஜீ மட்டும் காரணம், வேறு யாரும் இல்லை. என் குழந்தை கலைந்ததே முதல் காரணம். என் கணவர், குழந்தை, குடும்பத்தாரை எந்த தொந்தரவும் செய்ய வேண்டாம். இதுவே எனது மரண வாக்குமூலம். யாருடைய வற்புறுத்தலுமின்றி எழுதிக் கொள்கிறேன் என எழுதி வைத்துள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய கடலூர் டிஎஸ்பி ரூபன்குமார் மேற்பார்வையில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், முகலனிடம் புகாரை பெற்று பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிந்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் சமீபகாலமாக கணவர் முகிலனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்த சோனியா, சென்னையில் வேலை செய்தபோது தன்னுடன் பணியாற்றிய பட்டாலியன் காவலரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த ராஜீ (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் தனிமையில் நெருங்கி பழகிய நிலையில், அவரால் சில நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டதாலும், கர்ப்பம் கலைந்ததாலும் மனஉளைச்சலில் இருந்துள்ளார். மேலும் வழிக்காவல் பணியால் சோனியா விரக்தியுடன் வீடு திரும்பிய நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முடிவை எடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் இருந்த பட்டாலியன் காவலர் ராஜீயை கைது செய்த போலீசார் நெல்லிக்குப்பம் அழைத்து வந்து அவரிடம் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்க உள்ளனர்.சென்னை ஆயுதப்படை பெண் காவலர், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post நெல்லிக்குப்பம் அருகே சென்னை ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை appeared first on Dinakaran.