நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணாநகர் 3வது அவென்யு, வேளச்சேரி 100 அடி சாலை: 3 புதிய மேம்பாலம் அமைக்க திட்டம்

2 weeks ago 5

* விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மாநகராட்சி மும்முரம்

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சென்னையின் 3 முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டுவது குறித்து விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, பாலப் பணிகளை தொடங்கினால் மாற்று வழிகள் ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னையில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல். பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகளால் தற்போது பல இடங்களில் வாகன நெரிசல் காணப்படுகிறது.

மேலும் வாகன பெருக்கமும் முக்கிய காரணமாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் தினசரி 10 லட்சம் கார்கள், 40 லட்சம் இரு சக்கர வாகனங்கள் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

திமுக ஆட்சி காலங்களில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பல இடங்களில் அதிகமான அளவில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னையில் முக்கியமான அத்தனை சிக்னல்களும் மேம்பாலங்களாக மாறிவிட்டன என்றே சொல்லலாம். சென்னையில் எத்தனை மேம்பாலங்கள் உள்ளது என்பதை எண்ணவே முடியாது. அந்த அளவிற்கு மேம்பாலங்கள் இருக்கிறது. சில இடங்களில் மேம்பாலங்கள் அமைத்தால் மாற்றுப்பாதை இல்லை என்பதால், மேம்பாலங்களை அமைக்காமல் அரசு தவிர்த்து வருகிறது.

இந்த காரணங்களால் மட்டுமே தற்போது சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் வாகன நெருக்கம் சென்னையில் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளர்ந்து விட்டது. அண்ணா சாலையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை, நந்தனம் முதல் திநகர் பேருந்து நிலையத்தை கடந்து நுங்கம்பாக்கம் நோக்கி செல்லும் சாலை, அண்ணா மேம்பாலம், நெல்சன் மாணிக்கம் ரோடு, ஈக்காட்டுதாங்கல், வேளச்சேரி செக் போஸ்ட், அண்ணா நகர் 3வது அவின்யூ, பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை, பள்ளிக்கரணை வேளச்சேரியை இணைக்கும் கைவேலி சிக்னல், பள்ளிக்கரணை பிரதான சாலை, திருவான்மியூர் டைட்டில் பார்க், சோழிங்கநல்லூர் சந்திப்பு, பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை, அனகாபுத்தூர் சாலை சந்திப்பு என பல இடங்களை சொல்லிக்கொண்டே போகலாம்..

இதில் அண்ணாசாலை, திநகர் உள்பட சில இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் 3வது அவின்யூ, வேளச்சேரி 100 அடி சாலை சிக்னல் ஆகிய 3 இடங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் முயற்சியாக புதிதாக மேம்பாலங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. இதில் வேளச்சேரியை பொறுத்தவரை ஒருபுறம் 100 அடி ரோடு, மறுபுறம் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் ஆகியவற்றில் தொடங்கி பீனிக்ஸ் மால் வழியாக வேளச்சேரி செக் போஸ்ட் வரை வாகன நெருக்கடி மிகமிக அதிகம்.

பீக் ஹவர்ஸ் என அழைக்கப்படும் நெருக்கடி நேரங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். வேளச்சேரி செக் போஸ்ட்டை தாண்டி விட்டால் ராஜ்பவன் செல்பவர்களும், கிண்டி ரயில் நிலையம் செல்பவர்களும் பரிதவித்து போவார்கள். இதற்கு தீர்வு காணும் வகையில் ஐந்து பர்லாங் சாலை ஜங்ஷனில் இருந்து குருநானக் கல்லூரி ஜங்ஷன் வரை மேம்பாலம் ஒன்றை கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதேபோன்று, சென்னையில் நெல்சன் மாணிக்கம் சாலைமற்றும் அண்ணா நகர் 3வது அவின்யூவில் மேம்பாலம் கட்டுவதற்கு விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது. விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 3 முக்கியமான இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டால் போக்குவரத்து நெரிசலில் இருந்து மக்கள் தப்பிக்க வாய்புள்ளது. அதற்கான நடவடிக்கையை தான் சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகரின் இதயம் என்றழைக்கப்படும் முக்கிய பகுதிகளில், நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா நகர் 3வது அவின்யூ, வேளச்சேரி 100 அடி சாலை சிக்னல் ஆகிய 3 இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிதாக மேம்பாலங்கள் கட்டுவதற்கு, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த 3 முக்கிய பாலங்களை கட்டுவதற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த இடங்களில் பாலங்களை கட்டுவது என்பது சவாலான பணி தான். இதில் நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையை பொறுத்தவரை, பாலம் கட்ட ஆரம்பித்தால், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் தொடங்கி பூந்தமல்லி ஹைரோடு வரை மாற்று வழி என்பது மிகவும் சவாலானதாக இருக்கும். ஏனெனில் சாலை என்பது மிகவும் குறுகியதாக இருக்கும். அதேபோன்று அண்ணா நகர் 3வது பிரதான சாலை என்பது அதிக நெரிசல் உள்ள பகுதியாகும். இங்குமே மாற்று வழிகள் தான் சவாலானதாக இருக்கும். எனவே இந்த பணிகளை சரியான திட்டமிடலுடன் தொடங்குவதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணாநகர் 3வது அவென்யு, வேளச்சேரி 100 அடி சாலை: 3 புதிய மேம்பாலம் அமைக்க திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article