பல்லடம், ஜன.18: பல்லடம் அருகேயுள்ள சின்னக்காளிபாளையம் பகுதியில் ஒரு விவசாயின் நெல் வயலில் குருத்து புழு தாக்கி நெல் பயிர் மணிகள் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. இது குறித்து விவசாயி ஈஸ்வரன் கூறியது: சின்னக்காளிபாளையத்தில் உள்ள எனது விவசாய நிலத்தில் 7 ஏக்கரில் ஆந்திரா பொன்னி, மாப்பிள்ளை சம்பா ஆகியவை வயலில் பயிரிடப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகியுள்ளது. வயலில் நெல் மணிகள் பிடித்து வளர்ந்து வரும் நிலையில் குருத்து புழு தாக்குதல் காரணமாக நெல் மணிகள் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
அதனால் மகசூல் குறையும். விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இதனை தவிர்க்க வேளாண்மை துறையினர் கள ஆய்வு செய்து குருத்து புழு தாக்குதலை அழிக்கத்தக்க ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் அம்மை நோய் தாக்குதலால் என்னுடைய 5 நாட்டு மாடுகள் இறந்துவிட்டன. இந்த நோயை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்பு துறையினர் இப்பகுதியில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தி கால்நடைகளுக்கு தடுப்பூசிகளை போட வேண்டும் என்றார்.
The post நெல் வயலில் குருத்து புழு தாக்குதல் appeared first on Dinakaran.