சென்னை,
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வட தமிழக கடற்கரையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி வருகிறது.
அது இன்று (19-12-2024) மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், நாளை மறுதினம் (21-12-2024) நெல்லூர் அருகில் சென்று மீண்டும் வட தமிழகத்தை நோக்கி, 22-ந்தேதி நகர்ந்து வந்து 23, 24-ந்தேதிகளில் டெல்டா-வட இலங்கை வழியாக உள் மாவட்டங்களை கடந்து அரபிக்கடலுக்கு செல்ல இருக்கிறது.
இதன்காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மிதமான மழையும், நாளை மறுதினம் மற்றும் அதற்கு அடுத்த நாள் மழை குறைந்தும், பின்னர் 22-ந்தேதி மீண்டும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும், 23, 24-ந்தேதிகளில் உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மழை பெய்வதற்கான சூழல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 24-ந்தேதிக்கு பிறகு ஓரிரு நாட்கள் மழைக்கான வாய்ப்பு குறைந்து காணப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து 27-ந்தேதி வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அவ்வப்போது பலத்த தரைக்காற்று 35 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று (19-12-2024) தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், ஆந்திர கடலோரப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடலின் வடக்குப்பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடலில் தெற்கு பகுதி ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிமீ வேகம் முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
நாளை (20-12-2024) வடதமிழக கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்