விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சிறிய, பெரிய அளவிலான 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 5 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் நாடு முழுவதிலும் ஒன்றரை கோடி பேர் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள். இந்தியாவின் சில பகுதிகளில் பட்டாசு உற்பத்தி நடந்தாலும் நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 95 சதவீதம் சிவகாசியில்தான் நடக்கின்றது.
நாம் ஒரு நிமிடத்தில் வெடிக்கும் பட்டாசு ஒரே நாளில் தயாரிக்க கூடியவை அல்ல. ஒரு பட்டாசை தயாரித்து பேக்கிங் செய்ய 4 நாட்கள் வரை ஆகின்றன. முதல் நாளில் மருந்து கலவை, மருந்து செலுத்துதல், 2வது நாளில் திரி வைத்து முனை மருந்தை காய வைத்தல், 3வது நாளில் லேபிள்கள் ஒட்டி காய வைத்தல், 4வது நாளில் முழுமை பெற்ற பட்டாசுகளை பெட்டியில் அடைத்து சலோன் ஒட்டி பேக்கிங் செய்தல் என ஒரு பட்டாசு முழுமை பெற 3 முதல் 4 நாட்கள் வரை ஆவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது மழை காலங்களில் கூடுதலாக ஒருசில நாட்கள் ஆகிவிடும் என்றும் கூறுகின்றனர்.
சிவகாசி பட்டாசு தொழில் கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. சீன பட்டாசு வருகையால் பாதிப்பு, மூலப்பொருட்களினால் விலையேற்றம், ஜிஎஸ்டி வரியால் பாதிப்பு, பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை, பல்வேறு மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை, வெடிக்கும் நேரம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளினால் பட்டாசு தொழில் தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக சரவெடிக்கு தடையால் சிவகாசியில் பட்டாசு தொழில் பெரிய அளவில் சரிவை சந்தித்து விட்டது. இருந்த போதிலும் பல்வேறு தடைகளை தாண்டி சிவகாசி பட்டாசு தொழில் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களை வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றது.
2016 மற்றும் 2019க்கு இடையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ₹4 ஆயிரம் கோடி முதல் ₹5 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனையானது. கொரோனா கால கட்டங்களில் 2020ல் ஒட்டுமொத்த சில்லரை விற்பனை முறையே முந்தைய ஆண்டுகளின் சராசரியை விட குறைவாக இருந்தது. தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு தீபாவளிக்கு ₹4,200 கோடி அளவில் பட்டாசு விற்பனையானது. அதனை முறியடித்து அனைத்து தடைகளையும் தாண்டி கடந்த 2022ல் தீபாவளிக்கு உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பட்டாசுகளும் விற்பனையானதால், ₹6 ஆயிரம் கோடிக்கு முதல் முறையாக வர்த்தகம் நடைபெற்றது. கடந்த ஆண்டும் பாதிக்காத வகையில் விற்பனை நடைபெற்றதால் ₹6 ஆயிரம் கோடி வர்த்தகத்தை சிவகாசி தக்க வைத்தது. நடப்பாண்டு ₹6 ஆயிரம் கோடியை தாண்டி வர்த்தகத்தில் புதிய மைல்கல்லை சிவகாசி எட்டும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கேற்றார்போல ஒவ்வொரு ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் அனைவரையும் கவரும் விதத்தில் புதுப்புது பட்டாசு வகைகளை அறிமுகப்படுத்துவது சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வாடிக்கையாக உள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு சுமார் 450 வகையிலான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் குட்டி ஜப்பான் களைகட்டி உள்ளது.
பட்டாசு விற்பனையாளர்கள் கூறும்போது, ‘‘தீபாவளி பண்டிகையொட்டி வெளி மாநிலங்களுக்கு பெரும்பாலான பட்டாசுகள் அனுப்பி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளி மாவட்டங்களுக்கு பட்டாசுகள் அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு பட்டாசு விலை 5 சதவீதம் மட்டும் உயர்த்தப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களாக மிஷின் திரி தட்டுப்பாடு காரணமாகவும் தொடர் மழை காரணமாகவும் பேன்சி ரக பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பேன்சி ரக பட்டாசுகள் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன்விலை 10 முதல் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இறுதிக்கட்ட பட்டாசு விற்பனையில் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு உற்பத்தி குறைவாகவும் எதிர்பார்த்ததை விட விற்பனை நன்றாகவும் உள்ளது’’ என்றனர்.
விசில் போடு
ஈமு கோழி வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இவ்வகை பட்டாசுகள் முன் பகுதியில் பற்ற வைத்தவுடன் விசில் அடித்துக் கொண்டே மின்மினி பூச்சி போன்று கலர் கலராய் மினுமினுக்கும். விசில் சத்தம் மட்டும் நாம் காதுகளை மகிழ்விக்கும்.
இளைஞர்களை
சுண்டி இழுக்கும் பேஷன் ஷோ
இளைஞர்களை கவரும் வகையில் புதிய தொழில்நுட்பத்தில் ‘பேஷன் ஷோ 240’ என்னும் புதிய வகை பட்டாசு திரியில் தீயைப் பற்ற வைத்தவுடன் 200 அடி வரை உயரச் சென்று, 6 மல்டி கலரில் தொடர்ந்து வெடித்து விண்ணை ஜொலிக்க வைக்கும். இவை 25 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக வெடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில் இந்த பட்டாசுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ராணுவ பீரங்கியும்… போர்க்களமும்…
ராணுவ பீரங்கி வடிவிலான பட்டாசில் திரியில் தீ பற்ற வைத்தவுடன், தீப்பொறிகள் பீரங்கியிலிருந்து வெளியேறி தெறிக்க விடுகின்றது. பேன்சியுடன் மத்தாப்பு கலந்து புது மாதிரியாக இந்த பட்டாசு உருவாக்கப்பட்டுள்ளது. போர்க்களத்தில் பல்வேறு திசைகளிலிருந்து எதிரிகளை தாக்குவது போல் மேலே சென்று வெடித்து தீப்பொறிகளை கலர்கலராய் வெளிப்படுத்தும் வகையிலும் நேராக தீப்பொறிகளை கலர் கலராய் தெறிக்கவிடும் வகையிலும் இந்த பட்டாசு உருவாக்கப்பட்டுள்ளது. டேங்க் என்ற பீரங்கி வாகன பட்டாசுகள் இந்தாண்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பட்டாசுகள் தற்போது சமூக வலைதளங்களிலும் அதிகமாக வைரலாகி உள்ளது.
2கே கிட்ஸ் பேவரிட் வெடி 350 அடி பறந்து வெடிக்கும்
2கே கிட்ஸ்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பட்டாசுகள், பற்ற வைத்தவுடன் 350 அடிவரை வானில் சென்று வெடித்து சிதறும். வெடிக்கும் போது 7 வகையான கலரில் மினுமினுக்கும். வானில் வர்ண ஜாலம் காட்டும் இந்த பட்டாசுகள் மண்ணில் இருந்து பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கும். இந்த வகை பட்டாசுகள் பிக் பிளாஸ், கோல்ட் கிங், மில்லியன் என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.
பறக்கும் ஹிட்லர் வெடி
ஆப்பிரிக்க இஸ்லாமிய அரசன் பெயரிலும், ஹிட்லர் பெயரிலும் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வெடிகள் பற்ற வைத்தவுடன் ரவுண்ட் கட்டிக்கொண்டே 20 அடி வரை உயரே சென்று 25 செகண்ட் கலர் கலராய் படபட வென்று வெடித்துக்கொண்டே நமது மனதை சிதறடிக்கும்.
குஷிப்படுத்தும் காரும்…
முட்டையிடும் கோழியும்…
சிவகாசியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மக்களை கவரும் வகையில் புதிய பட்டாசு வகைகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் புதுப்புது பெயர்களில் விதவிதமான பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. சிவகாசியில் தயாரிக்கப்படும் பெரும்பாலான வெடிகள் குழந்தைகளை குஷிப்படுத்தும் வகையில்தான் அதிகம் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் புதிதாக வந்துள்ள வெடிதான் ஸ்போர்ட்ஸ் கார். பின் பகுதியில் உள்ள திரியில் பற்ற வைத்தவுடன் மின்னல் வேகத்தில் விசில் எழுப்பியபடி சென்று குழந்தைகளை மகிழ்விக்கின்றது. இந்த வெடி வெடித்த உடன் ஸ்போர்ட்ஸ் காரை மறுபயன்பாட்டிற்காக குழந்தைகள் விளையாட்டிற்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். முட்டை கோழி வடிவில் உருவாக்கப்பட்டுள்ள பட்டாசில் ஒரு பகுதியில் கம்பி மத்தாப்பு பற்ற வைத்துவிட்டு இயக்கினால் மென்மையான இசையுடன் மூன்று முட்டையிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வகை பட்டாசுகளும் மறு பயன்பாட்டிற்கு விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
டிராபிக் மாஸ்டர்
வெடிக்காத இந்த வெடியில் பற்ற வைத்தவுடன் ஸ்டார், ஸ்டாராக மினுமினுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. விசில் எழுப்பியபடி மேலே செல்லும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலரில் மேலே சென்று குழந்தைகளை மகிழ்விக்கும்.
டச்மீ பால்ஸ்
பூச்சட்டி வகையை சேர்ந்த இவ்வகை பட்டாசுகள் பற்ற வைத்தால் 10 அடி வரை உயரே சென்று வெள்ளை பனித்துளி போல் கொட்டும். பட்டாசு பொறியும் போது தொட்டு தொட்டு விளையாடலாம். இந்த பட்டாசுகளும் குழந்தைகளை கவரும் வகையில் அமைந்துள்ளது.
பட்டர் பிளை
3 வண்ணங்களில் ரீங்காரமிட்டு நடனமாடும் இந்த பட்டர் பிளே பட்டாசுகள் சந்தையில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இதேபோல் மெகா ஜம்போ போட்ஸ் என்ற பெயரில் வந்துள்ள இந்த பூச்சட்டிகள் 20 அடி வரை உயரே சென்று பொறி பொறியாய் பொறிந்து மகிழ்விக்கும்.
சத்தம் மட்டும் தான் கேட்கும்
பற்ற வைத்தவுடன் பயங்கர விசில் சத்தம் எழுப்பியபடி விரைந்து விண்ணில் பாய்கின்றது. வெடிக்காத இந்த பட்டாசுகள் விசில் சத்தத்தை பிரமிப்புடன் உணரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதுபோக விஐபிக்களுக்கு என்று விதவிதமான பட்டாசுகள் அடங்கிய விஐபி கிப்ட் பாக்ஸ்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் தொடர் தடை
பட்டாசுகளுக்கு தடை விதிக்கும் நடைமுறையை டெல்லி அரசு கடந்த 4 ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறது. புது டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்தாண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post நெருங்கியது தீபாவளி; களைகட்டும் குட்டி ஜப்பான்: 450 வகை பட்டாசு ரெடி; ரூ.6,000 கோடி விற்பனை இலக்கு appeared first on Dinakaran.