*நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
நெய்வேலி : நெய்வேலியில் இருந்து மந்தாரக்குப்பம் செல்லும் சாலை ஓரத்தில் கொட்டிக்கிடக்கும் மணல், சாம்பல் பவுடர்களால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. நெய்வேலியில் இருந்து மந்தாரக்குப்பம் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
அதேசமயம் என்எல்சி ஏரியில் சாம்பல் பவுடர் உள்ளிட்டவைகள் லாரி மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனிடையே சாலையில் லாரிகள் அதிகளவு பாரம் ஏற்றிச் செல்லும்போது தார்பாய்கள் போடாமல் சாலை வளைவுகளில் வேகமாக செல்வதால் லாரியிலிருந்து மணல், சாம்பல் பவுடர் சாலையோரம் சிதறுகின்றன.
இதனால் நெய்வேலியில் இருந்து சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள் போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் என்எல்சி ஊழியர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது சாலையோரம் குவிந்து கிடக்கும் மணல் மீது ஏறி வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உருவாகி உள்ளது.
இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. குறிப்பாக என்எல்சி சாலையில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசாததால் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது.
எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை செய்து அதிவேகமாக லாரியில் சாம்பல் பவுடர் எடுத்துச் செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நெய்வேலி- மந்தாரக்குப்பம் சாலையில் மணல் குவியலால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.