நெட்டப்பாக்கம் தொகுதி முழுமையாக புறக்கணிப்பு கிராமப்புற மக்களை வஞ்சிக்கும் ஆட்சி புதுச்சேரியில் நடக்கிறது

3 hours ago 2

*முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. வட்டார காங்கிரஸ் தலைவர் அம்மைநாதன் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினா.

கூட்டத்தில் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, சீனியர் துணை தலைவர் தேவதாஸ், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், விஜயவேணி, இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஆனந்த்பாபு நடராஜன், பொதுச்செயலாளர் சத்தியநாராயணன், தெற்கு மாவட்ட தலைவர் பிரகாஷ், நிர்வாகிகள் தனுசு, இளையராஜா, மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது, பாஜ-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின் ஊழல்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டு செல்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசும்போது, பல போராட்டங்களை நடத்தி புதுச்சேரியை இந்தியாவுடன் இணைத்த பெருமை முன்னாள் முதல்வர் தியாகி வெங்கடசுப்பா ரெட்டியாருக்கு உண்டு. அவரது தலைமையில் தான் எல்லா பகுதிகளும் ஒன்றாக இணைந்து, கீழூரில் பிரெஞ்சுக்காரர்களை அகற்றி, புதுச்சேரிக்கு நாம் சுதந்திரத்தை பெற்றோம். புதுச்சேரி மாநிலத்திற்கு சுதந்திரம் பெற வேண்டும் என்ற போராட்டத்தை உருவாக்கிய பெருமை நெட்டப்பாக்கத்துக்கு உண்டு. பல முதல்வர்களை உருவாக்கிய தொகுதி இது.

காங்கிரஸ் கட்சியை கொடியை உயர்த்திப் பிடித்த தொகுதி நெட்டப்பாக்கம். எல்லா திட்டங்களும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர்.காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சியில் நெட்டப்பாக்கம் தொகுதி முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகள் இல்லை, வீடுகட்டும் திட்டம் நிறைவேற்றப்படவில்லை, சாலைகள் சரிசெய்யப்படவில்லை, சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நான் முதல்வராக இருந்தபோது மக்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டது. மாதந்தோறும் முறையாக தடையின்றி முதியோர், விதவை உதவித்தொகை வழங்கப்பட்டது.

சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பது இந்தியை புகுத்தும் வேலை. எங்கள் மாநிலத்திற்கு இருமொழி கல்வி தான் நல்லது எனக்கூறி புதிய கல்வி கொள்கையை நாங்கள் எதிர்த்தோம். ஆனால் முதல்வர் ரங்கசாமி, மோடிக்கு ஜால்ரா போட்டுக் கொண்டு, புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கிறார். மக்கள் விரோத திட்டங்களை கொண்டு வருகிறார். பள்ளி, கல்லூரிகளில் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமை நடக்கிறது.

இப்போது கிராமப் பகுதிகளுக்கும் கஞ்சா வந்துவிட்டது. போதை பொருட்களுக்கு பிள்ளைகளை அடிமை ஆக்குகிறார்கள். இதை தடுத்து நிறுத்தினார்களா? சொத்து, வீடு, நிலம் அபகரிப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடக்கிறது. கோயில் இடத்தை பட்டா போட்டு விற்கிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் 400 மது பார் இருந்தது. இப்போது 950 மது பாராக உயர்ந்துவிட்டது.

லஞ்சம் வாங்கிக் கொண்டு இன்னும் 8 மதுபான தொழிற்சாலைகளை கொண்டு வருகிறார்கள். கிராமப்புற மக்களை வஞ்சிக்கும் ஆட்சி புதுச்சேரியில் நடக்கிறது. எனவே, இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அமோக வெற்றிபெற வேண்டும் என்றார்.

The post நெட்டப்பாக்கம் தொகுதி முழுமையாக புறக்கணிப்பு கிராமப்புற மக்களை வஞ்சிக்கும் ஆட்சி புதுச்சேரியில் நடக்கிறது appeared first on Dinakaran.

Read Entire Article