புதுச்சேரி, மார்ச் 28: பெயிண்டரை கத்தியால் குத்திய 2 வாலிபர்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் நீதிபதி தீர்ப்பளித்தார். புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே மடுகரை பெரியபேட் பால்வாடி தெருவை சேர்ந்த கந்தன் என்பவரின் மனைவி தவிட்டம்மாள், கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி இறந்துவிட்டார். அவரின் இறுதி ஊர்வலத்தில் ஏரிப்பாக்கம் புது காலனியை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் வீரன் மற்றும் அவரது தம்பியான பெயிண்டர் முத்தழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மடுகரை முத்துநகரை சேர்ந்த அய்யனார் மகன் தீனா (எ) தீனதயாளன் (23) என்பவர் சவ ஊர்வலத்தில் அவமதிக்கும் விதத்தில் நடனமாடியதால், அவரை முத்தழகன் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் தீனதயாளன், முத்தழகனை திட்டி பேசியதால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் இரவு 8 மணி அளவில் தீனதயாளன் மற்றும் அவரது நண்பரான ராஜ் (எ) சுதந்திரராஜ் (26) ஆகிய இருவரும் சேர்ந்து வீட்டு வாசலில் நின்றிருந்த முத்தழகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வயிற்றில் குத்தி, அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து முத்தழகனின் சகோதரர் வீரன், நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து தீனா (எ) தீனதயாளன், ராஜ் (எ) சுதந்திரராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை தற்போதைய நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் கவனித்து வந்தார். இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தலைமை குற்றவியல் நீதிபதி சிவகுமார் தீர்ப்பு வழங்கினார். அதில், தீனா (எ) தீனதயாளன் மற்றும் ராஜ் (எ) சுதந்திரராஜ் ஆகிய இருவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், 307 பிரிவின் கீழ் இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், 326 பிரிவின் கீழ் இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அபராத தொகையை கட்ட தவறும் பட்சத்தில் இருவரும் மேலும் 6 மாதம் காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜு ஆஜராகி வாதாடினார்.
The post நெட்டப்பாக்கம் அருகே பெயிண்டரை கத்தியால் குத்திய 2 வாலிபர்களுக்கு தலா 5 ஆண்டு சிறை தலைமை குற்றவியல் நீதிபதி தீர்ப்பு appeared first on Dinakaran.