
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். மக்களின் அமோக ஆதரவில் 2021 சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஆட்சி தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவிகிதத்தை நிறைவேற்றி சாதனைகளை படைத்து வருகிறது. அதை சகித்துக் கொள்ள முடியாத அமித்ஷா, தி.மு.க. அரசை மக்கள் விரோத ஆட்சி, தேசவிரோத ஆட்சி என்று கூறியதோடு, ஊழல் குற்றச்சாட்டுகளையும் கூறியிருக்கிறார்.
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு, 2002 பிப்ரவரியில் குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஆயிரக்கணக்கான சிறுபான்மையின மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் ஆர்.கே. ராகவன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்தது. அன்றைய குஜராத் மந்திரி நரேந்திர மோடி, 9 மணி நேரம் இப்படுகொலை குறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது குஜராத் மாநில உள்துறை மந்திரியாக இருந்த அமித்ஷா விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு குறிப்பிட்ட கலவரத்தில் 30 பேர் கொண்ட கும்பல் 21 வயது நிரம்பிய 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரது தாயார் மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை கொலை செய்தனர். கொலை செய்யப்பட்டவர்களில் பில்கிஸ் பானுவின் 3 வயது பெண் குழந்தையும் ஒன்று என்பதை சொல்லவே நமது நெஞ்சம் பதறுகிறது. இந்த வழக்கில் குஜராத்தில் நீதி கிடைக்காது என்பதால் சுப்ரீம் கோர்ட்டு ஆணையின்படி, வழக்கு விசாரணை மும்பையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 பேருக்கு ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.
ஆனால், குற்றவாளிகளை குஜராத் மாநில பா.ஜ.க. அரசு தனது தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை பயன்படுத்தி திடீரென விடுதலை செய்தது. அப்போது விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்த விடுதலையை எதிர்த்து சமூகநல ஆர்வலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் குற்றவாளிகள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதேபோல, உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது தலித் பெண் கடந்த 2020 செப்டம்பர் 14ம் தேதி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அவரது எலும்புகள் உடைக்கப்பட்டும், நாக்கு அறுக்கப்பட்டும், கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். இறந்த பெண்ணின் உடலை டெல்லி மருத்துவமனையிலிருந்து சொந்த ஊருக்கு உத்தரபிரதேச காவல்துறையினர் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று அந்த பெண்ணின் குடும்பத்தினருக்குக் கூட தெரிவிக்காமல் நள்ளிரவு இரண்டரை மணியளவில் அவரது கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் வைத்து தகனம் செய்தனர். இதுபோன்ற கொடுமை இந்திய வரலாற்றில் இதுவரை நடந்ததேயில்லை. இத்தகைய கொடுமையை செய்த யோகி ஆதித்யநாத் தான் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இத்தகைய பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை நிகழ்த்திய கொடியவர்களுக்கு ஆதரவாக அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசுவதற்கு அமித்ஷாவுக்கு என்ன உரிமை இருக்கிறதா?
மேலும், அமித்ஷா ஊழலைப் பற்றி பேசுகிறார். சாத்தான் வேதம் ஓதுகிறது. சுப்ரீம் கோர்ட்டு தேர்தல் பத்திர நன்கொடைகளை பிப்ரவரி 2024 இல் ரத்து செய்கிற வரை, பா.ஜ.க. தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெற்ற மொத்த நன்கொடை ரூபாய் 6060 கோடி. இதில் 33 நஷ்டம் அடைகிற நிறுவனங்கள் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நெருக்கடி காரணமாக பா.ஜ.க.வுக்கு ரூபாய் 541 கோடியை நன்கொடையாக வழங்கியிருக்கின்றன. அதேபோல, 2023-24 ஆம் ஆண்டில் பா.ஜ.க.வின் வருமானம் ரூபாய் 4340 கோடி என ஜனநாயக சீரமைப்பு சங்கம் தனது அறிக்கையின் மூலமாக தெரிவித்துள்ளது. இது 6 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடையில் 74.57 சதவிகிதம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவை பத்தாண்டு காலம் ஆட்சி செய்து வருகிற பா.ஜ.க., கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செய்கிற உதவிக்கு கைமாறாக தேர்தல் பத்திர நன்கொடை என்கிற போர்வையில் நிதியை குவித்தது ஊழல் இல்லை என்றால் வேறு எது ஊழல் என்பதை அமித்ஷா விளக்க வேண்டும்.
2023 டிசம்பரில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையில், மத்திய நெடுஞ்சாலைத்துறையின் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில் ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆதாரபூர்வமாக கூறியபோது, அதுகுறித்து நரேந்திர மோடியும், அமித்ஷாவும் எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஆதாரமற்ற 2ஜி குற்றச்சாட்டில் சி.ஏ.ஜி. அறிக்கையில் ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்ற கூறிய போது, அன்றைய மன்மோகன்சிங் அரசு சி.பி.ஐ. மூலம் விசாரித்து வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
நெடுஞ்சாலைத்துறை ஊழல் குறித்து சி.பி.ஐ. மூலம் விசாரிக்க மத்திய பா.ஜ.க. அரசு அஞ்சுவது ஏன்? மடியில் கனம் இருப்பதால் ஊழலைப் பற்றி விசாரிக்க மோடியும், அமித்ஷாவும் தயாராக இல்லை. அதேபோல, புதிய கல்விக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள், மும்மொழி திட்டத்தை ஏற்கவில்லை என்றால் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய 2152 கோடி ரூபாயை தரமாட்டோம் என்று ஆணவத்தோடு கொக்கரிக்கிற மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், தமிழக நலன்களுக்கு விரோதமாக செயல்படுவதற்கு அமித்ஷா என்ன பதில் சொல்லப் போகிறார் ? இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக ஒட்டுமொத்த தமிழகத்தின் கோபத்திற்கு ஆளாகியுள்ள பா.ஜ.க.வை ஆயிரம் அமித்ஷாக்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும் காப்பாற்ற முடியாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.