நெடுஞ்சாலை அருகே ஒருவர் படுகொலை: தி.மு.க. ஆட்சியில் எங்குமே பாதுகாப்பு இல்லை - எடப்பாடி பழனிசாமி

3 days ago 3

சென்னை,

தேசிய நெடுஞ்சாலையில் படுகொலை நடந்திருப்பது, தி.மு.க. ஆட்சியில் எங்குமே பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இன்று அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட ஈரம் காய்வதற்குள் அதே மாவட்டத்தில் அடுத்த கொலை நடந்திருப்பது, அதுவும் அதிக போக்குவரத்து நடமாட்டம் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இப்படி ஒரு படுகொலை நடந்திருப்பது, இந்த தி.மு.க. ஆட்சியில் எங்குமே பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது.

முக்கியமான பிரச்சனையை சுட்டிக்காட்டுகிறேன் என்ற புரிதல் துளியும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள மு.க.ஸ்டாலினின் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

ரமேஷ் கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க கடுமையான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article