
சென்னை,
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
"மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் கூலி உயர்வு கேட்டு கடந்த ஆண்டு முதல் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நெசவுத் தொழிலை சார்ந்திருக்கும் சிறு, குறு தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தார்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் 150 கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராடினார்கள். இந்த நிலையில், வருகின்ற மே 19-ந்தேதி மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
அவர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு தே.மு.தி.க. ஆதரவு அளிக்கிறது. மேலும், விசைத்தறி தொழிலை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். நெசவுத் தொழிலை நம்பி வாழ்கின்ற நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.