குன்னூர், செப்.30: நீலகிரி கோட்டத்தில் காட்டுமாடுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் 55 சதவீதத்திற்கும் மேல் வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்குள்ள வனங்கள் முதுமலை புலிகள் காப்பகம், முக்கூருத்தி தேசிய பூங்கா, நீலகிரி வன கோட்டம், கூடலூர் வன கோட்டம் என பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்த வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடுகள், யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவைகள் உள்ளன. இதுதவிர ஈட்டி, ேதக்கு உள்ளிட்ட மரங்களும் உள்ளன. தற்போது, வன விலங்குகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் அதற்கேற்ப வனப்பரப்பு இல்லாத நிலையில் வன விலங்குகள் கிராம பகுதிகளுக்குள் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது.
வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பு, நீரோடைகள் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் உலா வர கூடிய சூழல் உருவாகியுள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீலகிரி வன கோட்டத்தில் காட்டுமாடுகள் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. நீலகிரி வன ேகாட்டத்தில் கோத்தகிரி, குன்னூர், குந்தா, பெங்கால்மட்டம், கேத்தி, செலவிப்நகர், ஊட்டி – கோத்தகிரி சாலை, குன்னூர் – கோத்தகிரி சாலை, தூதூர்மட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காட்டுமாடுகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன.
காட்டுமாடுகள் நடமாடும் பகுதிகளில் பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் வகையில் எவ்விதமான எச்சரிக்கை பலகைகளும் இல்லை. இதனால் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. எனவே, காட்டுமாடுகள் நடமாட்டம் உள்ள இடங்களில் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறுகையில்,‘‘நீலகிரி மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை காட்டுமாடுகளை காண்பதே அரிது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக வனப்பகுதிகளில் தென்படும். தற்போது நீலகிரி மாவட்டத்தில் இவை கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. தேயிலை தோட்டங்கள், குடியிருப்பை ஒட்டிய பகுதிகளிலேயே நடமாடுகின்றன. காட்டுமாடுகள் நடமாட்டம் தற்போது பகல் நேரங்களிலேயே அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வர வேண்டிய சூழல் உள்ளது. எனவே வனத்துறை சார்பில் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை அமைக்க வேண்டும்’’ என்றனர்.
The post நீலகிரியில் காட்டு மாடுகள் நடமாடும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் appeared first on Dinakaran.